ஜார்ச்டவுன் – 2021 ஆண்டுக்கான மாநில அளவிலான சுதந்திர மாதம் மற்றும் தேசிய கொடியைப் பறக்க விடுவோம் பிரச்சாரம் மிதமான முறையில் தொடங்கப்பட்டது.
‘பரிவுமிக்க மலேசியா’ என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டுக்கான சுதந்திர தினக் கொண்டாட்டம் கோவிட்-19 தாக்கத்தால் புதிய இயல்பில் பரிமாணம் காண்கிறது.
கோவிட்-19 தொற்றுநோய் தாக்கம் பொது மக்கள் சுதந்திர உணர்வு மற்றும் தேசபக்தியை மேலோங்க செய்ய தடையாக அமையக் கூடாது என மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் வலியுறுத்தினார்.
“எனவே, இதனை உறுதிபாடாக கொண்டு மாநில அரசு பினாங்கில் கோவிட்-19-ஐ எதிர்ப்போம் என்ற பிரச்சாரத்தில் முறையான மற்றும் விவேகமான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கோண்டு பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
“இது மாநில அரசு வருகின்ற செப்டம்பர் மாதம் மூத்தவர்களுக்கான மக்கள் தொகையில் 100% முதல் மருந்தளவு பெறுவதை உறுதி செய்வதோடு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை காட்டிலும் சமூக நோய் எதிர்ப்பு சக்தியை விரைவில் அடையும் திட்டத்திற்கு ஏற்ப அமைகிறது,” என கொம்தார் 5-வது மாடி அரங்கத்தில் நடைபெற்ற சுதந்திர தின பிரச்சாரத்தில் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில சபாநாயகர், டத்தோ லாவ் சூ கியாங்; முதலாம் துணை முதல்வர் அமாட் ஜக்கியுதீன் அப்துல் ரஹ்மான்; மாநில செயலாளர், டத்தோஸ்ரீ அப்துல் ரசாக் ஜாபர் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மாநில முதல்வர் தமது உரையில் பினாங்கு வாழ்
மக்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு நாட்டின் சுகாதார பாதுகாப்பை மேம்படுத்த முனைப்புக் காட்ட வேண்டும், என்றார்.
“கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இதயம் மற்றும் தேசிய கொடி வடிவிலான சின்னம் கோவிட்-19 சவாலை சந்தித்த போது உருவாக்கப்பட்டது. எனினும், இந்த சவாலை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு அனைவரின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும்.
“ஆகையால், இந்த ஆண்டு சுதந்திர மாதக் கொண்டாட்டத்தை மேலும் உயிர்ப்பிக்க வாகனங்கள், வீடுகள் அல்லது அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் தேசிய கொடியைப் பறக்க விடுவோம்,” என்று அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், பினாங்கு தகவல் இயக்குனர் டாக்டர் ஹனிஃப் ஹாசன் தேசிய கொடியை மாநில முதல்வரிடம் வழங்கினார். தேசிய மாதம் தொடங்குவதற்கும், மாநிலத்தில் தேசிய கொடியை பறக்க விடுவதற்கும் அடையாளமாக இது திகழ்கிறது.
இந்நிகழ்ச்சி, சுதந்திர கொண்டாட்டத்தை முன்னிட்டு Info On Wheels (IOW) எனும் வாகன அணிவகுப்புடன் நிறைவுப்பெற்றது.
மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய 15 இடங்களில் மொத்தம் 75 IOW சுதந்திர தின கொண்டாட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
கூடுதலாக, மொத்தம் 3,000 தேசிய கொடிகள் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை மாநிலத்தில் உள்ள அரசு முகவர், துறைகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படும்.