மலேசியாவின் மூன்றாவது மிகச் சிரிய மாநிலமான பினாங்கு மாநில குடிமக்கள் அனைவருக்கும் தமிழ் முத்துச் செய்திகள் சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். கடந்த 2012-ஆம் ஆண்டு பினாங்கு இந்திய சமுதாயத்திற்குச் சிறந்ததோர் ஆண்டாக அமைந்திருக்கும் என நம்புகிறோம். இன்பம் துன்பம், வெற்றி தோல்வி, உயர்வு தாழ்வு என்பது நம் வாழ்க்கையில் இரண்டரக் கலந்தவையாகும். ஆக, வாழ்வில் நிகழும் சோதனைகளை நமக்குச் சாதகமாக்கிச் சாதனைகளாக மாற்றி மேன்மை கண்டு உயர வாழ்த்துகிறோம்.
2013-ஆம் ஆண்டின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தைப் பினாங்கு மக்களோடு குதூகலமாகக் கொண்டாட மாண்புமிகு முதல்வர் மேதகு லிம் குவான் எங் பாடாங் கோத்தா தலத்திற்கு டிசம்பர் 31 பின்னிரவில் வருகை மேற்கொண்டார். அவருடன் பினாங்கு துணை முதல்வர் டத்தோ மன்சோர் ஒஸ்மான், சட்டமன்ற உறுப்பினர்களான திரு லாவ் ஹெங் கியாங், திரு ஜெஃப் உய், திரு லிம் ஹொக் செங் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். காலை 11.00 மணிக்கெல்லாம் தொடங்கிய பினாங்கு தங்கப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தைப் பினாங்கு மாநில அரசு மற்றும் பினாங்கு நகராண்மைக் கழக ஆதரவுடன் CreatiVision D.C Sdn Berhad நிறுவனம் ஏற்று நடத்தியது. இதன் துணை ஆதரவாளர்களாக Celcom Axiata Bhd தொலைதொடர்பு நிறுவனம், Volkswagen மகிழுந்து நிறுவனம், மற்றும் SuriaFM வானொலி பண்பலையும் பங்கெடுத்தன.
புத்தாண்டை வரவேற்ற வண்ண மயமான வானவெடிகள்
ஏறக்குறைய 50,000 பேர் இப்புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். மலாய், சீனர், இந்தியர் என நாட்டின் தலைச் சிறந்த கலைஞர்கள் பங்குபெற்றுத் திரளாக வந்திருந்த மக்களை மகிழ்வித்தனர். ஆடல் பாடல் என்று புத்தாண்டுச் சிறப்பு மேடைப் படைப்புகளை மக்கள் கண்டு களித்தனர். அதில், பினாங்கு இந்திய மக்களை மகிழ்விக்க கோலாலம்பூரைச் சேர்ந்த வில்லன் குழுவினர் வந்திருந்தனர். அவர்கள் வழங்கிய பாடல்கள் இந்திய மக்களை மட்டுமன்றி அனைத்து இனத்தவரையும் கவரக் கூடிய வகையில் அமைந்தது. அனைத்து கலைஞர்களின் மேடைப்படைப்பு முடிவுற்றதும் மாண்புமிகு முதல்வர் லிம் புத்தாண்டை வரவேற்க மாநிலத் தலைவர்களுடன் மேடையில் ஏறினார். மணி 12.00ஐ தொட்டதும் புத்தாண்டு பிறந்ததின் அடையாளமாக இருள் சூழ்ந்த வானத்தை வானவெடிகள் அலங்கரித்து ஒளிரச் செய்தன. சுமார் ஐந்து நிமிடங்களுக்கு தொடர்ந்து வெடித்த அவ்வானவெடிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.
இவ்வாண்டு பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதால், பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து ஊழலையொழித்து மக்களின் நலன் கருதி ஆக்கப்பூர்வமான திட்டங்களைச் செயற்படுத்தி உலக அரங்கில் மலேசியாவை அனைத்துத் துறையிலும் தலைச் சிறந்த நாடாக உருவாக்கும் வல்லமை கொண்ட ஆற்றல்மிக்க சிறந்த அரசாங்கத்தை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் லிம் தம் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கேட்டுக் கொண்டார். இவ்வாண்டில் புதிய முயற்சிகளையும் குறிக்கோளையும் கொண்டு அனைவரும் வெற்றிப் பாதையில் பயணிக்க தம் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். இறுதியாக, “Dunia belum khiamat; berjuang sampai tamat” இந்த உலகம் இன்னும் அழியவில்லை; எனவே அதுவரை தொடர்ந்து போராடு, என்ற அருமையான சுலோகத்தைப் பகிர்ந்து கொண்டு முதல்வர் விடைபெற்றுக் கொண்டார்.