ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது பல அரசு சாரா இயக்கங்களுடன் இணைந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அகதிகள் மற்றும் ரோஹிங்கியா சமூகம் உட்பட அனைவரின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சமூகநலன் உறுதிப்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளது.
“கோவிட்-19 வைரஸ் தொற்று நோய் இனம், மதம் அல்லது குடியுரிமை ஆகியவற்றில் பாகுபாடுக் காட்டாது.
“எங்கள் மாநிலத்தில் புலம்பெயர்ந்த சமூகத்தின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் நாங்கள் உறுதிப்படுத்தவில்லை என்றால், வைரஸ் தொற்று சங்கிலியை உடைக்க முடியாது. இதனால், பினாங்கு வாழ் பொது மக்கள் மற்றும் மலேசியர்கள் இத்தொற்று நோயிக்குப் பாதிப்புக்குள்ளாவர் ,” என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் முகநூல் நேரலையில் கூறினார்.
பினாங்கில் இயங்கும் மலேசிய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (எஃப்.எம்.எம்), மற்றும் ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு சங்கம் (ரெட்ஹா) ஆகியவற்றின் கீழ் பணிப்புரியும் தொழிலாளர்கள் குறிப்பாக அந்நிய தொழிலாளர்கள் உட்பட அனைவரின் பாதுகாப்பு மற்றும் சமூகநலன் உறுதிச் செய்யுமாறு முதல்வர் அறிவுறுத்தினார்.
இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணயின் போது எஃப்.எம்.எம், பினாங்கு கிளை தங்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சமூக இடைவெளி பின்பற்றுதல் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களான முகக் கவசம், கைத்தூய்மி போன்றவை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
தொழிலாளர்கள் இந்த பாதுகாப்பு வழிகாட்டலை பின்பற்றுவதை உறுதிச்செய்ய மாநில இரு ஊராட்சி மன்றங்களான பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கட்டுமானப் பகுதிகளைக் கண்கானித்து வருகின்றனர்.
மாநில அரசு தொடர்ந்து சுய சமூக சங்கம் (Persatuan Komuniti Berdikari), பினாங்கு மனித கடத்தல் எதிர்ப்பு பிரச்சாரம் (Penang Stop Human Trafficking Campaign), ‘பினாங்கு அஸ்பயர்’ (ASPIRE Penang), மலேசிய நிவாரண முகவர் (Malaysian Relief Agency), எல்லைகள் அற்ற மருத்துவர்கள் (Doctors Without Borders), பினாங்கு பராமரிப்பாளர்கள் (Caremongers Penang) மற்றும் பினாங்கு பணிக்குழு (Penang Working Group) ஆகிய அரசு சாரா இயக்கங்களுடன் இணைந்து செயல்படுவதாக முதல்வர் தெரிவித்தார்.
கடந்து வாரம், அகதிகள் சமூகத்திற்கு உதவும் வகையில் சுய சமூக சங்கத்திற்கு (Persatuan Komuniti Berdikari) நிதியுதவி வழங்கப்பட்டது, என்றார்.
மேலும், வசதிக் குறைந்த பொது மக்களுக்கு உதவும் நோக்கத்தில் குறிப்பாக சமூக நலத்துறை மற்றும் சமத்துவப் பொருளாதாரத் திட்டத்தின்(ஏ.இ.எஸ்) கீழ் பதிவுப்பெற்றவர்களுக்கு அடிப்படை மளிகைப் பொருட்கள் சன்மானமாக வழங்கப்படும்.
நேற்று தொடங்கி தென்மேற்கு மாவட்டத்தில் மளிகைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன, மற்ற மாவட்டங்களுக்கும் கட்ட கட்டமாக இந்த மளிகைப் பொருட்கள் கொடுக்கப்படும் என்று சாவ் கூறினார். பினாங்கின் ஐந்து மாவட்டங்களில் மொத்தமாக 20,000 மளிகைப் பொருட்கள் உள்ளடக்கியப் பெட்டிகள் வழங்கப்படும்.
மாநில அரசு முத்தியாரா உணவு வங்கி வாயிலாக இந்த பொருட்களை இம்மாநில ஐந்து மாவட்டங்களின் முக்கிய மையங்களில் விநியோகம் செய்யும். அவை பின்வருமாறு:-பினாங்கின் வடகிழக்கு மாவட்டம் கொம்ப்லெக்ஸ் மஸ்யாராகாட் பென்யாயாங் (Kompleks Masyarakat Penyayang); தென்மேற்கு மாவட்டம் பொதுச் சந்தை கட்டடம், பாலிக் புலாவ் (Dewan Kompleks Pasar Awam Balik Pulau); வட செபராங் பிறை மாவட்டம் ராஜா உடா, தன்னார்வலர் மற்றும் தீயணைப்புச் சங்க அலுவலகம் (Pejabat Persatuan Bomba dan Sukarela Raja Uda); மத்திய செபராங் பிறை மாவட்டம் புக்கிட் மெர்தாஜாம், தாமான் புக்கிட் கெச்சில் ஜே.கே.ஆர் அரங்கம் (Dewan JKR Taman Bukit Kecil, Bukit Mertajam); தெற்கு செபராங் பிறை மாவட்டம் நிபோங் திபால், புக்கிட் பன்சோர் எம்.பி.கே.கே அரங்கம் (Dewan MPKK Bukit Panchor, Nibong Tebal).