பிறை – “பினாங்கு2030 இலக்கை நோக்கி பாலின சமத்துவ கொள்கைக்கு முன்னுரிமை அளித்து அனைத்து தரப்பினரும் பாலின பாகுப்பாடு இன்றி ஒருவருக்கொருவர் மதிப்பளிக்க வாய்ப்புகள் வழங்கப்படுவது உறுதிப்படுத்த வேண்டும்.
அதாவது 40 சதவீதம் பெண்கள், 40 சதவீதம் ஆண்கள் மற்றும் 20 சதவீதம் பெண் & ஆண் என அனைவரும் ஒன்றிணைந்து முடிவுகளை எடுக்க வேண்டும் என பினாங்கு மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது. பினாங்கு மாநில அரசு பாலின சமத்துவக் கொள்கை அமலாக்கத்தில் பிற மாநிலங்களுக்கு எடுத்துகாட்டாக தொடர்ந்து நிலைப்பெற்றிருக்கும்.
மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகமும் பிறை பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டுக் குழுவின் (JPWK) இணை ஏற்பாட்டில் நடைபெற்ற ‘Jelajah pasembor dan Cendol’ எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமதுரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மாநில அரசாங்கம் என்றும் பெண்களின் முன்னேற்றத்திற்கு முன்னெடுத்துச் செல்லும் திட்டங்கள் நடத்துவதற்கு தொடர்ந்து ஆதரவு நல்கும் என தாமான் சாய் லெங் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி குறிப்பிட்டார்.
பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பிறை பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டுக் குழுவின் (JPWK) இம்முயற்சியினைப் பாராட்டி இந்நிகழ்ச்சியை வழிநடத்த நிதியுதவியும் வழங்கினார்.
கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் இம்மாதிரியான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததற்கு தமது பாராட்டுகளை பேராசிரியர் தெரிவித்துக் கொண்டார்.
மாநில அரசு, பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தை (Penang Women Development Centre) கடந்த 2008-ஆம் ஆண்டு துவக்கி வைத்து பெண்கள் உரிமை மற்றும் பாலின சமத்துவத்தை நிலை நிறுத்த பல முன்னெடுப்புத் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அத்தினத்தன்று சிறுவர் முதல் பெரியோர் வரை பங்கேற்று பயன்பெறும் வகையில் விளையாட்டுப் போட்டிகள், ‘சூம்பா’ உடைப்பயிற்சி, மருதாணி வரைதல் என இன்னும் பல சிறப்பு அமசங்கள் இடம்பெற்றன. வருகையாளர்களைக் கவரும் வண்ணம் ‘சென்டோல்’, என்ரிகோஸ் பானம் மற்றும் ‘பசும்போர்’ இலவசமாகப் பரிமாறப்பட்டது.
இதனிடையே, சிறுதொழில் வியாபாரிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அத்தினத்தன்று மூவின வியாபாரிகளும் தங்களின் உணவுகளை விற்க வாய்ப்புகள் வழங்கப்பட்டதாக பிறை கம்போங் நிர்வாக செயல்முறை கழகத் தலைவர் ஶ்ரீ சங்கர் தெரிவித்தார்.