தெலுக் ஆயர் தாவார் – பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி ராணி பட்டு
சட்டமன்றம் மற்றும் மக்கள் அவையில் பாலின சமத்துவத்தை நிலைநிறுத்த அதிகமான பெண்கள் அரசியல் களத்தில் இறங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அந்த இரு அமைப்புகளிலும் பெண்களுக்கு உரிமை குரல் எழுப்பதற்கான 30 விழுக்காடு இலக்கை இன்னும் அடையவில்லை என தெளிவுப்படுத்தினார்.
“மக்கள் அவையின் 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 32 பேர்கள் மட்டுமே பெண்கள் ஆவர். இந்த எண்ணிக்கை 14 விழுக்காடு பங்களிப்பை மட்டுமே சித்தரிக்கிறது. இருப்பினும் 1995-ஆம் ஆண்டு அல்லது அதற்கு முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் நாடாளுமன்றத்தில் பெண்கள் 10 விழுக்காட்டிற்கு குறைவாகவே காணபட்டனர்.
“அரசியலில் பெண்களின் பங்களிப்பு அவசியம். ஏனெனில், பெண்கள் அனைவருக்கும் குரல் எழுப்புவார், குறிப்பாக அவளது பிள்ளைகள், கணவர், பெற்றோர்கள் மற்றும் சமூகம் என முன்னெடுத்துச் செல்வாள்.
“தனித்து வாழும் தாய்மார்கள், வசதி குறைந்த பெண்கள், வன்முறையால் பாதிக்கப்பட்டோர் மற்றும் பல விவகாரங்களுக்காக பெண்கள் அரசியல் களத்தில் அவர்களின் உரிமைக்காக போராடுவர்,” என வட செபராங் பிறை, தாமான் பெர்காசா அரங்கத்தில் நடைபெற்ற 2020 மகளிருக்கான மாநாட்டில் உரையாற்றுகையில் கஸ்தூரி இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தெலுக் ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினர், முஸ்தபா கமல் அகமது மற்றும் பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் (பி.டபள்யூ.டி.சி) தலைமை நிர்வாக அதிகாரி ஓங் பீ லெங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டின் தலையாய நோக்கமானது
பெண்கள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மட்டும் உருவாக்குவது மட்டுமின்றி சிறந்த சமூகத் தலைவர்களாவும் உருமாற்றம் காணச் செய்வதாகவும் என எடுத்துரைத்தார்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் முஸ்தாப் கமால் அவர்களும் தனது 20 ஆண்டுகால அரசியல் பயண அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.