பினாங்கு கூட்டரசு முன்னேற்ற வாரியம் (பெர்டா) விற்பனைச் செய்த தெற்கு செபராங் பிறை, தொக் கெராமாட் பகுதியில் அமைந்துள்ள நிலத்தைக் காண்பதற்கு சுங்கை ஆச்சே சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமது சாக்காரியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய அந்நில கொள்முதலில் ஏற்பட்ட ஊழலை வெளிப்படுத்தவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர், அனுமதியின்றி பெர்டாவிற்கு சொந்தமான நிலத்திற்குள் மாநில முதல்வர் சென்றதாகக் குறிப்பிட்டதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. முதல்வர் அந்நிலத்தைக் காண சென்றபோதிலும் உள்ளே பிரவேசிக்கவில்லை என தெளிவுப்படுத்தினார். பொது மக்களின் நன்மையைக் கருதியே அந்நிலத்தைக் காணவும் அதில் ஏற்பட்டுள்ள மோசடியை எடுத்துரைப்பதற்கும் சென்றதாகக் கூறினார்.
பொது வீடமைப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை பெர்டா எவ்வாறு ரிம15.2 லட்சம் நஷ்ட்டத்திற்கு விற்றதாகக் கேள்வி எழுப்பினார். ஏன் (முகமது சாக்காரியா) மக்களின் பொதுநலம் குறித்து கேள்வி எழுப்பவில்லை, அதோடு அந்நிலத்தை காண எண்ணம் கொண்டால் ஒன்றிணைந்து செல்வோம் என அழைப்பு விடுத்தார் .
8.6 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்நிலத்தை ரிம1.427 மில்லியனுக்கு விற்கப்பட்டது . ஆனால் அந்நிலத்தின் மதிப்பீடு ரிம16.636மில்லியன் என மாநில உள்நாட்டு வரி வாரியம் நிர்ணயித்துள்ளது. பெர்டா நிலத்தை ரிம1.427 மில்லியனுக்கு விற்பனைச் செய்ததன் மூலம் ரிம15.209 மில்லியன் இழப்பீடு பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டினார் நில விவகாரம் மற்றும் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினரான குவான் எங் .பெர்டா தலைவரும் தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ சாபுடின் இந்நிலத்தை திறந்த குத்தகை முறையில் விற்பனைச் செய்யவில்லை என தெளிப்படுத்தினார்.
மேலும் , வீடமைப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இந்நிலத்தில் 27 யூனிட் கடை வீடுகள் கட்டுவதற்குத் “திட்டமிடல் அனுமதி” கோரி செபராங் பிறை நகராண்மைக் கழகத்திடம் கடந்த 28/3/2016-ஆம் நாள் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக வீடமைப்புத் திட்டம் , இப்பொழுது கடை வீடுகள் என மேம்பாட்டுத் திட்டம் மாறுபடுவதற்குக் காரணம் வினவினார் முதல்வர்.