புக்கிட் தெங்கா – மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ், பினாங்கு நீர் விநியோக வாரியத்தால் (பி.பி.ஏ.பி.பி) மேம்பாடுக் கண்டு வரும் பெர்மாத்தாங் திங்கி பம்ப் நிலையம் (pump house), இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் செயல்பாடுக் காணும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் தென் செபராங் பிறையில் குறிப்பாக முக்கிம் 5 வட்டாரத்தில் வாழும் குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கும் நீர் அழுத்தப் பிரச்சனைக்குத் தீர்வுக் காணப்படும், என்றார்.
பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் (PH) வேட்பாளருமான சாவ், பெர்மாத்தாங் திங்கி பம்ப் நிலையத்திற்கு வருகையளித்தப் பின்னர் பினாங்கு நீர் விநியோக வாரிய தலைமைச் செயல் அதிகாரி Ir. பத்மநாதனின் விளக்கவுரைக்குப் பின்னர்
இவ்வாறு கூறினார்.
“பினாங்கில், குறிப்பாக தென் செபராங் பிறை மாவட்டத்தில், சுத்திகரிக்கப்பட்ட நீர் மற்றும் மூல நீர் ஆதாரங்கள் பெறுவதற்குப் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம்.
“சில ஆண்டுகளாக தென் செபராங் பிறையில் குறைந்த நீர் அழுத்தம் மற்றும் உச்ச நேரங்களில் நீர் விநியோகத் தடைகளள் ஆகிய இன்னல்களை அவ்வட்டார மக்கள் எதிர்நோக்கிகின்றனர்.
“தென் செபராங் பிறையை பொறுத்தவரை, இந்த ஒரு வருடத்தில் இம்மாவட்டத்திற்குச் சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகப் பிரச்சனையால் பொது மக்களின் வாழ்க்கைத் தரம், வணிகம் மற்றும் தொழில்துறையிலும் பாதிப்பு ஏற்படுவதால், இதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்.
“எனவே, இது எஸ்.பி.எஸ் மாவட்டத்திற்கு மூல நீர் வழங்கல் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கல் திறனை அதிகரிப்பதற்கான குறுகிய காலத் திட்டமாகும்” என்று நிலம் மற்றும் பொருளாதார மேம்பாடு மற்றும் தகவல் தொடர்புக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர். அமர் பிரித்திபால் அப்துல்லா, புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர், கோ சூன் ஐக், ஜாவி சட்டமன்ற உறுப்பினர், ஜேசன் ஹெங் மொய் லாய் மற்றும் ஃபத்லினா சிடெக் (நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதிக்கான PH வேட்பாளர்) ஆகியோரும் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.
பெர்மாத்தாங் திங்கி பம்ப் நிலையத்தில் தற்காலிக பம்ப் நிறுவல் திட்டம், வருகின்ற நவம்பர் 30 ஆம் தேதி முழுமையாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு நாளைக்கு 16 மில்லியன் லிட்டர் கொள்ளளவு (எம்.எல்.டி) இயங்கும் திறன் கொண்டது. இந்த தற்காலிக பம்ப் நிலையத்தின் இயக்கத்தின் வாயிலாக 32,993 வாடிக்கையாளர்கள் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதுள்ள புக்கிட் பஞ்சோர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதிக்கு அருகிலுள்ள சுங்கை கெச்சிலில் இருந்து அதிகபட்சமாக 11MLD கொள்ளளவைக் கொண்ட மூல நீர் எடுக்கப்படுகிறது என கூறினார்.
முன்னதாக பேசிய Ir.பத்மநாதன், புக்கிட் பஞ்சோரில் தற்போதுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அதிகபட்சமாக 10 MLD-க்கு மேம்படுத்தும் பணியில் பினாங்கு நீர் விநியோக வாரியம் செயல்பட்டு வருவதாகவும், இது அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முழுமையாக நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக, கூறினார்.
மேலும், இந்தத் திட்டம் நிபோங் திபாலுக்கு அருகிலுள்ள சுங்கை கெச்சிலில் இருந்து மூல நீர் எடுக்கும் திறனை அதிகரிக்கும், இதனால் தென் செபராங் பிறை மாவட்டத்தைச் சுற்றியுள்ள சுமார் 4,000 வாடிக்கையாளர்கள் பயன்பெறுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து பத்து காவான் நாடாளுமன்ற வேட்பாளரான சாவ் கொன் இயோவ் புக்கிட் தம்புன் சட்டமன்ற தொகுதியில் அவரது பிரச்சாரத்தை மேற்கொண்டு அவ்வட்டார மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைச் செவி மடுத்தார்.