பத்து உபான் – மாநில அரசு மற்றும் கூட்டரசு அரசாங்கத்தின் சமூகநலத் திட்டங்கள், சுகாதார பரிசோதனை, இரத்த தான முகாம், மாநில அரசின் முகவர்கள் பட்டறை என அனைத்தும் நிகழ்வுகளும் ஒரு குடையின் கீழ் ‘ பத்து உபான் மக்கள் விழா’ என்ற நிகழ்வு பத்து உபான், தாமான் டேசா ரியாங் அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்றது.
இவ்விழா பொது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் சமூகநலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மேலோங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் நடத்தப்பட்டதாக பத்து உபான் மக்கள் விழாவை அதிகாரப்பூர்வமாகத் திறந்த வைத்த பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.குமரேசன் இவ்வாறு கூறினார்.
ஒரு குடையின் கீழ் நடத்தப்படும் இந்நிகழ்வில் பொது மக்கள் குறிப்பாக பத்து உபான் வட்டார மக்கள் கலந்து கொண்டு நன்மைப் பெறுவர் என நம்புவதாகக் கூறினார்.
முதல் முறையாக நடத்தப்படும் இவ்விழாவில் சிறுத்தொழில் வியாபாரிகளுக்கு ஊக்கம் வழங்கும் வகையில் சிறு கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது என குமரேசன் தெரிவித்தார். மேலும், இவ்விழாவில் பினாங்கு மாநகர் கழகம், பெர்கேசோ கழகம், சமூகநலத் துறை என பல அரசு முகவர்கள் விளக்கவுரை வழங்கினர்.அதுமட்டுமின்றி பொது மக்கள் மாநில அளவிலான சமூகநலத் திட்டங்களில் பதிவு; பி.டி.சி நம்பிக்கை கடனுதவிப் பதிவு மற்றும் வாக்காளர் பதிவும் இடம்பெற்றன.
பத்து உபான் சட்டமன்ற சேவை மையம் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற என்றும் தயார்நிலையில் இருப்பதாக அதன் சட்டமன்ற உறுப்பினர் கூறினார். அண்மையில் இவ்வட்டாரத்தைச் சேர்ந்த மூன்று குடும்பங்களுக்கு மருத்துவ செலவினத்திற்கு நிதியுதவி வழங்கியதாக கூறினார். மேலும் கடந்த ஓர் ஆண்டாக பத்து உபான் மக்களின் நன்மைக்காக மேற்கொண்ட சமூகநலத் திட்டங்கள் ஆண்டறிக்கையாக அச்சிடப்பட்ட புத்தகத்தையும் மக்களிடம் காண்பித்தார்.
இந்நிகழ்வில் பத்து உபான் செயல்முறை கழகத் தலைவர் மற்றும் தாமான் டேசா ரியாங் குடியிருப்பாளர் சங்கத் தலைவர் மற்றும் அரசு முகவர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பத்து உபான் சேவை மையத்தில் உணவு வங்கி திட்டம் ஒவ்வொரு புதன்கிழமை இடம்பெறும் . எனவே, பி40 குழுவைச் சேர்ந்த பொது மக்கள் உணவுப் பொருட்கள் பெற்றுக்கொள்ள அழைக்கப்படுகின்றனர்.