மக்கள் பிரதிநிதியைப் பள்ளி வளாகத்தில் நுழைய தடைவிதிப்பது கல்வி அமைச்சின் முறையான செயல் அல்ல – இங் மொய் லாய்

Admin

நிபோங் திபால்- ஜாவி சட்டமன்ற உறுப்பினர் இங் மொய் லாய் இவ்வட்டார தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கோவிட்-19 தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் முயற்சியாக முகக் கவசங்களை அன்பளிப்பாக வழங்கினார். 

கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க கைத்தூய்மி பயன்படுத்துவதோடு மட்டுமின்றி முகக் கவசம் அணிவதன் மூலம் பாதுக்காக்கப்படுவர், என்றார். 

இந்த முகக் கவசங்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய
‘காப்பர் ஃபைபர் ஆன்டிபாக்டீரியல்’ வகையைச் சேர்ந்தது. பள்ளி மாணவர்களின் நலன் கருதி 1,600 முகக் கவசங்களை இந்த தொகுதியில் தமிழ்ப்பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.  இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாகக் கொண்ட மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்க முடிகிறது என விளக்கமளித்தார். 

மலேசிய கல்வி அமைச்சு மாநில அல்லது எதிர்க்கட்சி அரசாங்க பிரதிநிதிகள் பங்களிப்பு, உதவி மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள பள்ளி வளாகத்திற்குள் நுழைய தடைவிதித்துள்ளாதாக  ஜாவி தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு முகக் கவசங்கள் வழங்க சென்றபோது பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்ததாக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

“இச்செயல் மிகவும் வருத்தமளிக்கிறது.  ஏனெனில், கல்வி அமைச்சு எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகள் பள்ளிகளுக்கு அன்பளிப்பு வழங்க கூட அனுமதி மறுத்துள்ளது.

“தற்போது  இந்த கடினமான சூழலில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிற்கு  உதவ விரும்பினாலும்  மத்திய அரசின் அரசியல் விளையாட்டால் இது தடைப்படுகிறது.

இந்த அன்பளிப்பு வழங்குவதன் மூலம் பி40 குழுவினர் மற்றும் வசதிக் குறைந்த பெற்றோர்களின் சுமையைக் குறைக்க இயலும் என குறிப்பிட்டார். 

மக்கள் பிரதிநிதி என்ற முறையில் எனது தொகுதியில் அமைந்திருக்கும் பள்ளிகளுக்கு முகக் கவசங்கள் அன்பளிப்பாக வழங்க சென்ற போது கல்வி அமைச்சின் உத்திரவில்  பள்ளி வளாகத்தின் உள்ளே நுழைய அனுமதி வழங்கவில்லை என அறிந்து வருத்தம் கொண்டேன். 

தற்போது கோவிட்-19 தாக்கத்தால் அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் இம்மாதிரியான அரசியல் பிரச்சனைகளை பள்ளிகள் வரை கொண்டு செல்வது முறையான செயல் அல்ல. மாறாக இந்த அன்பளிப்பு மூலம் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாக ஊழியர்களின் பாதுகாப்பை முதன்மை படுத்தியே வழங்க முன்வந்ததாக மேலும் விவரித்தார்.