மத்திய அரசு கோவிட்-19 தாக்கத்தால் பாதிக்கப்பட்ட அங்காடி வியாபாரிகளுக்கு உதவ வேண்டும்.

Admin

 

பத்து லஞ்சாங் – பெரும்பாலான மாநிலங்களில் நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி) நடைமுறைப்படுத்த அறிவித்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குழுக்களுக்கு குறிப்பாக அங்காடி வியாபாரிகளுக்கு மத்திய அரசு உதவ முன் வர வேண்டும்.

வீடமைப்பு, உள்ளூராட்சி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ, அங்காடி வியாபாரிகளின் நலனுக்காக குரல் எழுப்பினார்.

பினாங்கில், பி.கே.பி.பி மற்றும் கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் நலன் பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு வருவாய் வசூல் விலக்குகள் மற்றும்
குறுகிய கால நிதியுதவியும் வழங்கப்படுகின்றன என ஜெக்டிப் விளக்கமளித்தார்.

மத்திய அரசு, மலேசிய சுகாதார அமைச்சு (எம்.ஓ.எச்) மூலம் பி.கே.பி.பி செயல்படுத்துவதாக அறிவித்தபோது, இதனால் ​​பாதிக்கப்படும் இலக்கு குழுவினருக்கும் உதவ நிதி ஒதுக்கீடும் பரிசீலிக்க வேண்டும்.

“எனவே, வியாபாரம் நடத்த முடியாமல் தினசரி வருமானத்தை இழந்து தவிக்கும் அங்காடி வியாபாரிகள் போன்ற தரப்பினருக்கு மத்திய அரசு உதவ முன் வர வேண்டும். இந்த பி.கே.பி.பி அமலாக்கத்தால் அங்காடி வளாகங்கள் காலியாக இருப்பதைக் கண் கூடாக காண முடிகிறது.

“மத்திய அரசு பி.கே.பி.பி-யை அறிவிக்கும் போது, பாதிக்கப்பட்ட இலக்கு குழுவினருக்கான உதவித் திட்டம் உத்தேசித்திருக்கும்.
எனவே, மத்திய அரசிடமிருந்து இந்த அங்காடி வியாபாரிகளுக்கான உதவித்திட்டம் (குறுகிய , நடுத்தர மற்றும் நீண்ட கால) என எந்த அடிப்படையில் இத்திட்டம் அமல்படுத்த போவதாக அறிய விரும்புகிறேன். ஏனெனில், அவர்களும் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறார்கள், ” என்று மெவா கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வருகையளித்த பின்னர் செய்தியாளர்களிடம் ஜெக்டிப் இவ்வாறு கருத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பத்து  லஞ்சாங் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஓங் ஆ தியோங்; மூத்த உதவி செயலாளர் (வீடமைப்பு), ‘ஐனுல் ஃபதிலா சம்சூடி; மூத்த உதவி செயலாளர் (வீட்டமைப்பு மேலாண்மை பிரிவு), மொஹமட். பவ்சீ யூசோப் மற்றும் மெவா கோர்ட் மேலாண்மை குழுவின் தலைவர் டி. இம்மானுவேல் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.

மேலும், மாநில அரசு வர்த்தகர்கள் உட்பட பாதிக்கப்பட்ட அனைத்து இலக்கு குழுக்களுக்கும் உதவ ரிம155 மில்லியனுக்கான உதவித் திட்டத்தை மூன்று பிரிவுகளாக அறிவித்தது.

முன்னதாக, 16 நீர் தொட்டிகளை மாற்றுவதற்கான விண்ணப்பத்தின் அனுமதி ஒப்புதலை அறிவிக்க ஜெக்டிப் மேவா கோர்ட் அடுக்குமாடிக்கு வருகையளித்தார் .

“இந்த நீர் தொட்டி பராமரிப்புப் பணிக்கான மொத்த செலவு ரிம468,000 ஆகும். இந்த நிதித் தொகையில் 80 சதவீதம் (ரிம374,400) மாநில அரசும், மீதமுள்ள 20 சதவீதம் (ரிம93,600) மேவா கோர்ட் அடுக்குமாடி மேலாண்மை குழுவும் பொறுப்பு ஏற்கும்.

இந்த பராமரிப்புத் திட்டம் முடிவடைய எட்டு வாரங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில அரசு உருவாக்கப்பட்ட ஐந்து வீடமைப்பு நிதியம் மூலம், பினாங்கு மாநிலம் முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் வீடமைப்புப் பராமரிப்புத் திட்டங்களுக்காக மாநில அரசு ரிம262.7 மில்லியனை செலவிட்டதாக டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் தெரிவித்தார்.

பினாங்கு 80 சதவீத  பராமரிப்பு நிதியத்தின் (TPM80PP)கீழ், மொத்தம் 411 பராமரிப்புப் பணிகள் சம்பந்தப்பட்ட 257 விண்ணப்பங்களுக்கு  மாநில அரசு மொத்தம் ரிம38.2 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.