மத்திய அரசு வடக்கு மாநிலங்களுக்கு நீர் விநியோகத்தை உறுதிச்செய்ய வேண்டும் – முதல்வர்

Admin
புதுப்பிக்கப்பட்ட சுங்கை டுவா நீர் சுத்திகரிப்பு நிலையம்
புதுப்பிக்கப்பட்ட சுங்கை டுவா நீர் சுத்திகரிப்பு நிலையம்

1.6 லட்ச மக்களின் உயிர்நாடியாகத் திகழும் சுங்கை டூவா பகுதியில் அமைந்துள்ள 12 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். இந்நீர் நிலையங்கள் பினாங்கு வாழ் மக்கள் சுங்கை மூடா ஆற்றிலிருந்து பெறும் 80% மூல தண்ணீரை சுத்திகரிக்கிறது என மேலும் தெரிவித்தார்.
தற்போது ஏற்பட்ட ‘சூப்பர் எல் நினோ’ பருவ கால மாற்றத்தால் மலேசியாவில் இருக்கும் பல மாநிலங்களில் நீர் பங்கீட்டு முறை அமல்படுத்திய வேளையிலும் பினாங்கு மாநிலம் மட்டும் இன்று வரை அதன் கொள்கையில் உறுதியாக உள்ளது. 1973-ஆம் ஆண்டு முன்னால் பிரதமர் துன் அப்துல் இராசாக் அவர்களால் கட்டப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் ஏழாவது முறையாக மறுசீரமைப்புச் செய்யப்படுள்ளது எனச் சுட்டிக்காட்டினார்.
கூட்டரசு அரசாங்கம் வடக்கு மாநிலங்கள் மூல நீர் பெறுவதை உறுதிச்செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங் இந்நிகழ்வில் தெரிவித்தார். “சுங்கை பேராக் மூல நீர் திட்டம்” செயல்படுத்த மத்திய அரசாங்கம் ரிம2 பில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதன் வழி 2020-ஆம் ஆண்டுக்குப் பின் பினாங்கு மாநிலம் நீர் பிரச்சனையை எதிர்நோக்காது என தெளிவுப்படுத்தினார்.
சுங்கை டூவா நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 32.5% நீர் இருப்புகளைக் கொண்டிருக்கிறது என பினாங்கு நீர் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி பொறியியலாளர் டத்தோ ஜாசானி மைடின்சா தெரிவித்தார். மேலும் மத்திய அசராசங்கம் உலு மூடா பாதுகாப்பு வனத்தில் அத்துமீறி மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும். இதனால் வடக்கு மாநிலங்களில் வசிக்கும் 4 லட்சம் மக்கள் நீர் பிரச்சனையால் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.