பினாங்கு மாநில அரசு வழங்கிய நிலத்தின் மூலம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி நிர்மாணிக்கும் கனவு மெய்ப்பிக்கப்பட்டது. 20 ஆண்டுகால கனவின் வெளிப்பாடாக ரெலாவ் பகுதியில் நிலம் வழங்கப்பட்டதோடு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி நிர்மாணைக்கப்படுவதை எண்ணி அகம் மகிழ்வதாக தெரிவித்தார் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் சங்கத்தின் தலைவர் டத்தோ தே செங் லிம் .
இந்தச் சிறப்பு பள்ளிக்கூட மேம்பாட்டுத் திட்டத்தில் இரட்டை மாடி கட்டிடம், 22 அறைகள், பொது மண்டபம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உள்ளடங்கும். மேலும் இத்திட்டம் இந்த ஆண்டு இறுதியில் நிறைவுப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எங்களின் நோக்கம் நிறைவேற மாநில அரசு வழங்கிய 1,373 ஏக்கர் நிலத்திற்கு நன்றி தெரிவித்தார் டத்தோ தே.
“தற்போது டத்தோ கெராமாட் பகுதியில் இருக்கும் இப்பள்ளியில் பயிலும் 85 மாணவர்களும் இடப்பற்றாக்குறை எதிர்நோக்குகின்றனர்” என டத்தோ தே தற்காலிக நில பட்டா வழங்கும் நிகழ்வில் கூறினார்.
தற்காலிக நில பட்டா வழங்கும் நிகழ்வினை மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார். மாநில அரசு வழங்கும் நிலம் ஏறக்குறைய ரிம17.7 மில்லியன் மதிக்கத்தக்கது என்றார்.