நமது நாட்டில் கள்ளச் சாராயத்தை ஒழிப்பதாகக் கூறி இன்று மலிவு சாராயத்திற்கு உரிமம் வழங்கி, அன்று கள்ளச் சாரயத்தைத் திருட்டுத் தனமாக விற்றவர்கள் இன்று உரிமம் பெற்ற தைரியத்தில் பல கடைகளைத் திறந்து இன்னும் இந்தியர்களிடம் விற்கின்றனர் எனச் சாடினார் செபராங் பிறை மாநகராட்சி கவுன்சிலர் டேவிட் மார்ஷல். இதுவும் ஒரு வகையான இன ஒழிப்பு நடவடிக்கையாகும் என பினாங்கு மாநிலத்தில் மலிவுச் சாராயத்திற்கு எதிராக மாபெரும் எதிர்ப்புப் பிரச்சாரம் பால்ம் இன் தங்கும்விடுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.
பிறை சமூக மற்றும் முன்னேற்றக் கழகம் உட்பட செபராங் பிறை வட்டாரத்தைச் சேர்ந்த பொது அமைப்புகளின் பொறுப்பாளர்கள் செபராங் பிறை பகுதியில் மட்டும் 369 அரசாங்க உரிமம் கொண்ட கடைகள் இருப்பதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகினர் . ச்சாப் நாகா 38%, அராக் ஜின் 42%, மிஸ்டர் டக்கீலா 27% என மலிவு சாராயத்தில் போதையின் தன்மை(அல்கோஹோல்) மிகக் கூடுதலாகக் காணப்படுகிறது. போதையின் அளவு அதிகமாகக் கொண்ட சாராயம் நச்சுத் தன்மையாக மாறி அதனைக் குடிக்கும் இளைஞர்கள் அதிக பட்சம் 5 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்கின்றனர். இந்த நிலைமையை மாற்றியமைக்கவும் மலிவுச் சாராயத்தை விற்பதில் இருந்து தடைச் செய்யவும் செபெராங் நகராண்மைக் கழக உறுப்பினர்களான திரு சத்தீஸ் முனியாண்டி மற்றும் டேவிட் மார்ஷல் மலிவுச் சாராய எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது பாராட்டக்குறியதாகும்.
இந்த மலிவுச் சாராயத்தைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடைய உணர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்த பிரச்சாரம் நடத்தப்படுகிறது என்றார் திரு சத்தீஸ். இப்போராட்டம் செபராங் பிறை வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் என்றார் திரு டேவிட் மார்ஷல். பினாங்கு மாநில அரசின் பேராதரவோடும் அனுமதியுடனும் இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்படவிருப்பதால் சமுதாய உணர்வோடு அனைவரும் ஒன்றிணைந்து பாடுப்பட வேண்டும் என ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொண்டனர். அன்று தொட்டு இன்று வரையில் நம் சமுதாயதின் கொடிய அரக்கனாக விளங்கிவரும் மலிவு விலை சம்சுவை ஒழிப்பதற்கு குடும்ப மாதர்கள், இளைஞர்கள், சமுதாய பற்றாளர்கள் தயங்காமல் தொண்டூழியர்களாக இணைந்து செயல்படலாம் எனக் கேட்டு கொண்டனர்.