பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் மலிவு விலை வீடமைப்புக் கண்காட்சியில் பொது மக்கள் கலந்து கொள்ள அழைக்கபப்டுகின்றனர். இந்நிகழ்வு வருகின்ற 8 & 9 ஏப்ரல் மாதம் பிராங்கின் மால் பேரங்காடியில் இனிதே இடம்பெறும்.
இந்தக் கண்காட்சி மக்களிடையே மலிவு விலை வீடமைப்புத் திட்டத்தை பற்றி விளம்பரப்படுத்தவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார்.
மாநில அரசாங்கத்தின் கீழ் இடம்பெறும் 10 வீடமைப்புத் திட்டத்தை உட்படுத்திய 2,634 வீடுகள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும்.
“பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மலிவு விலை வீடமைப்புத் திட்டத்தில் பதிவு செய்வதோடு, தகுதியுடையவர்கள் 1 யூனிட் வீடு வாங்கலாம்” என செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் கூறினார். இரண்டாவது முறையாக நடத்தப்படும் இந்தக் கண்காட்சிக்கு கடந்த ஆண்டு சிறந்த ஆதரவு கிடைக்கப்பெற்றதாக மேலும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் சமூகநல, சமூக பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ, ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சி, சுங்கை பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் சியூ கிம், மற்றும் மேம்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
இத்தருணத்தைப் பயன்படுத்தி திரு ஜெக்டிப் குறைந்த விலையில் பொது வீடமைப்புத் திட்டத்தை நிர்மாணிக்கும் மேம்பாட்டாளர்களுக்குப் புகழ் மாலை சூட்டினார்.