மலிவுவிலை வீடுகளைத் தகுதியுடையவர் பெறுவதை மாநில அரசு உறுதிப்படுத்தும்.

Admin

மாநில அரசாங்கம் பினாங்கு வாழ் மக்கள் தங்களுக்கென ஒரு மனையை வாங்க வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையில் மலிவுவிலை வீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் வீடு வாங்க விண்ணப்பித்தவர்கள் வேறு இடத்தில் வீடுகள் வாங்கியிருக்கக்கூடாது. அதேவேளையில் மாநில அரசாங்கத்தை ஏமாற்றி மலிவுவிலை வீடுகள் பெற்றிருப்பது ஆதாரத்துடன் நிருபணம் செய்யப்பட்டால் சட்டப்படி சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கொம்தார் சட்டமன்றத் தொகுதியின் மக்கள் சேவை மையத்தைத் திறந்து சிறப்புரை ஆற்றுகையில் தெரிவித்தார்.

தற்போது எஸ்.பி செல்லையாவில் மலிவுவிலை வீடுகள் கட்டுவதற்கான அடிப்படை வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. மாநில அரசு இவ்வீட்டுத் திட்டம் சுமூகமாக நடைபெறும் பொருட்டு ஒரு நேர்மையான கணக்காய்வாளர் நிறுவனத்தை நியமனம் செய்யவுள்ளது. இந்நிறுவனம் வீடு வாங்குபவரிடம் “வாங்கல் விற்றல் ஒப்பந்தம்” கடிதத்தில் கையொப்பம் பெறும். இதன் மூலம் மாநில அரசை ஏமாற்றி வீடு வாங்குபவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பினாங்கு மாநிலத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சொந்த மனையில்லாமல் இன்னலில் வாழ்கின்றனர். வறுமை ஒழிப்புத் திட்டத்தை அமல்படுத்தும் மாநில அரசு குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வீடுகள் கிடைப்பதை வசதியுள்ளவர்கள் தடுத்துவிடக் கூடாது என மாநில முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.

பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு ஆற்றல், பொறுப்பு, வெளிப்படை என்ற கோட்பாட்டில் நேர்மையான ஆட்சியை வழிநடத்துகிறது. எனவே மாநில அரசாங்கத்தை ஏமாற்ற எண்ணம் கொண்டவர்கள் தங்களின் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என முதல்வர் எச்சரித்தார். இத்திட்டத்தின் மூலம் பினாங்குவாழ் இந்தியர்களும் நன்மையடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.