சிம்பாங் அம்பாட் – TTM டெக்னோலோஜிஸ் என்பது மிஷன் சிஸ்டம் உட்பட புதுமையான தொழில்நுட்ப தீர்வின் முன்னணி உலகளாவிய உற்பத்தி நிறுவனத்தை பினாங்கில் துவங்கியுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டுகள் (PCB) தயாரிக்கும் இந்நிறுவனம் அமெரிக்கா நாட்டை தலைமையகமாக கொண்டுள்ளது.
இந்நிறுவனம் குறிப்பாக நெட்வொர்க்கிங் டேட்டா சென்டர் கம்ப்யூட்டிங், மருத்துவக் கருவி மற்றும் தொழில்துறை ஆகியவற்றில் TTM இன் உலகளாவிய வணிக சந்தையின் தேவைக்கு ஏற்ப தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட PCB உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது.
செபராங் பிறை, பினாங்கு அறிவியல் பூங்காவில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை 27 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது மிகவும் புதுமையான மற்றும் தானியங்கி PCB உற்பத்தித்திறனைக் கொண்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டளவில் உள்ளூர் மக்களுக்கு சுமார் 1,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க இயலும்.
தென்கிழக்கு ஆசியாவில் TTM
டெக்னோலோஜிஸ் நிறுவனம் நிறுவப்பட்ட முதல் பெரிய அளவிலான, அதிக தானியங்கி மற்றும் புதுமையான PCB உற்பத்தித் தொழிற்சாலையின் இருப்பிடமாக பினாங்கு மாறியுள்ளது என்று பினாங்கு முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் இந்நிறுவனத்தின் தொடக்க விழாவில் கூறினார். இது பினாங்கில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை நிரூபிக்கிறது.
“பினாங்கு அதன் வளர்ச்சியடைந்த தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பிற்காக கிழக்கு சிலிக்கான் பள்ளத்தாக்கு,” என அழைக்கப்படுகிறது.
மேலும், அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் மற்றும் விரிவாக்க உத்திகளுக்கான தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறனையும் கொண்டுள்ளது. TTM டெக்னோலோஜிஸ் பினாங்கில் பெரும் லாபத்தை ஈட்டும்,” என்று சாவ் நம்பிக்கை தெரிவித்தார்.
பினாங்கு 2022 இல் நாட்டின் முக்கிய பொருளாதார இயந்திரமாகவும், ரிம463 பில்லியன் ஏற்றுமதியுடன் நாட்டிலேயே சிறந்த இடத்தில் உள்ளது.
முதலீட்டு செயல்திறனைப் பொறுத்தவரை, பினாங்கு 2023 இல் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டில் ரிம63.4 பில்லியன் வரை ஈர்க்கும். 149 உற்பத்தித் திட்டங்கள் மூலம் 17,623 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், மின்சார மற்றும் மின்னணு துறை ரிம54.7 பில்லியன் (86%) பங்களித்தது.
2023 ஆம் ஆண்டில், பினாங்கு ரிம60.1 பில்லியன் வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் பதிவு செய்தது. இதில் அமெரிக்க முதலீடு ரிம6.7 பில்லியன் ஆகும். இது அமெரிக்க நிறுவனங்கள் பினாங்கின் முக்கியமான தொழில்துறை முதலீட்டாளர்கள் என்பதைக் காட்டுகிறது.
பினாங்கு ஒரு வலுவான தொழில்துறை சுற்றுச்சூழல், மின்னணு மற்றும் மின்சார மையமாகவும், சிறந்த திறன்மிக்க மனிதவளத்தையும் மற்றும் நல்ல வணிகச் சூழலைக் கொண்டுள்ளது என TTM டெக்னோலோஜிஸ் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.
“புதுமை மற்றும் விரிவாக்கத்தின் புதிய சகாப்தத்தில் நாம் நுழையும் போது, தொழில் தரத்தை உயர்த்தவும், வாடிக்கையாளர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், TTM டெக்னோலோஜிஸ் மலேசியப் பொருளாதாரத்தில் புதிய பங்களிப்பாளராக மாற்றவும் தொடர்ந்து கடினமாக உழைப்போம்,” என தோமஸ் குறிப்பிட்டார்.
2025-ஆம் ஆண்டளவில், புதிய தொழிற்சாலையிலிருந்து முழுத் திறனுடன் கூடிய வருவாய் 180 மில்லியன் அமெரிக்க டாலர்களை (தோராயமாக ரிம865 மில்லியன்) எட்டும் என்று தோமஸ் நம்பிக்கை தெரிவித்தார். கூடுதலாக, இந்த ஆலை இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை இவ்வாண்டு இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதலீட்டு ஊக்குவிப்பு இயக்குநர் நஜிஹா அபாஸ், இன்வெஸ்ட் பினாங்கு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ லூ லீ லியான், துணை நிர்வாகத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பில்லி டிட்டர்டன் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.