மலேசியாவின்  முதல் கபடி மைதானம் பினாங்கில் அமைக்கப்பட்டது – குமரேசன்

Admin

பத்து உபான் – “மலேசியாவின்  முதல் கபடி விளையாட்டு மைதானம் பினாங்கு மாநிலத்தில் அமைக்கப்பட்டது. இது பினாங்கு மாநில விளையாட்டுக் கவுன்சில்(எம்.எஸ்.என்) ஆதரவுடன் அதன் தளத்தில் அமைக்கப்பட்டது,” என பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் தெரிவித்தார்.

தமிழர்களின் விளையாட்டுகளில் ஒன்றான கபடி விளையாட்டின் பாரம்பரியத்தை பினாங்கில் நிலை நிறுத்தும் வகையில் அண்மைய காலமாக  குமரேசன் சட்டமன்ற கூட்டத்திலும் இது குறித்து குரலுழுப்பினார். 

இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ மற்றும் எம்.எஸ்.என் இணை ஒத்துழைப்புடன் ரிம35,000 நிதி ஒதுக்கீட்டில் இந்த கபடி விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட்டது, என்றார். 

1990ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவின் பெய்ஜிங் நகரில் கபடி ஆசிய விளையாட்டு போட்டியாக அங்கீகரிக்கப்பட்டது. ஆயினும்,   மலேசியா  சுக்மா போட்டியில் இது இன்னும் ஒரு முக்கியமான விளையாட்டாக கருதப்படவில்லை. 

இந்த விளையாட்டு ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் பரவலாக விளையாடப்படுகிறது, உடலுக்கும் மனவலிமைக்கும் தகுந்த ஆற்றலலை வழங்க கூடிய இந்த விளையாட்டை மாணவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். 


இந்த போட்டி பள்ளி ரீதியில் மட்டும் நடத்தப்படாமல்  மாநில மற்றும் தேசிய அளவிலும் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று குமரேசன் வலியுறுத்தினார்.

கடந்த  2018ஆம் ஆண்டு பினாங்கு மாநில கபடி விளையாட்டுச் சங்கத்தின் ஆலோசகராக பதவியேற்ற நாள் முதல் இந்த விளையாட்டு மேம்பாட்டுக்குப் பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக  குமரேசன் கூறினார். கடற்கரை கபடி போட்டி; பள்ளி அளவிலான கபடி பயிற்சிகள்; கபடி விளையாட்டு மைதானம் அமைத்தல் என பல திட்டங்கள் செயல்படுத்தியதாக மேலும் கூறினார். 

கபடி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக பினாங்கு கபடி விளையாட்டுச் சங்கத் தலைவர், டத்தோ பாலா மற்றும் அதன் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

புதியதாக அமைக்கப்பட்ட கபடி மைதானத்தில் நிர்வாக அலுவலகம் மற்றும் ஸ்டோர் அறை அமைக்க கொள்கலன் ஒன்றை ரிம7,000 நிதி ஒதுக்கீட்டில் வழங்கியதாக குமரேசன் கூறினார். 

முன்னதாக கபடி சங்க மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தவும் நிதியுதவி வழங்கியதாகக் கூறினார். 

கூடிய விரைவில் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் கபடி விளையாடுவதற்கு இந்த மைதானம் பயன்படுத்த அனுமத்திக்கப்படும். மாநில அரசின் முயற்சியில் கட்டப்பட்ட இந்த கபடி மைதானத்தை சிறந்த முறையில் பயன்படுத்துமாறு குமரேசன் கேட்டுக்கொண்டார்.