பட்டர்வொர்த் – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஏற்பாட்டில் முதல் முறையாக மத்திய செபராங் பிறையில் அமைந்துள்ள 6 தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் 143 மாணவர்கள் உட்பட 20 ஆசிரியர்கள் கடாரம் என்று அழைக்கபடும் கெடா பூஜாங் பள்ளத்தாக்கு மற்றும் நெல் அருங்காட்சியத்திற்கும் கல்வி சுற்றுலா மேற்கொண்டனர்.
புக்கிட் மெர்த்தாஜம் தமிழ்ப்பள்ளி, அல்மா தமிழ்ப்பள்ளி, பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி, ஜூரு தோட்ட தமிழ்ப்பள்ளி, பிறை தோட்ட தமிழ்ப்பள்ளி மற்றும் பிறை தமிழ்ப்பள்ளி என 6 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்த கல்வி சுற்றுலாவில் இடம்பெற்றனர்.
நம் நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வரலாற்றை அறிந்து வைத்திருப்பது அவசியமானது என்று கல்வி சுற்றுலாவை அதிகாரவப்பூர்வமாக தொடக்கி வைத்த பினாங்கு மாநில இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ அறிவுறுத்தினார்.
மாணவர்களின் சிறந்த எதிர்காலத்தை கல்வியால் மட்டுமே நிர்ணயிக்க முடியும். ஆகவே, மாணவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி எதிர்காலத்தில் பிரகாசிக்க வேண்டும் என ஜக்தீப் தமதுரையில் வலியுறுத்தினார்.
பினாங்கு மாநில அரசு கல்வி சார்ந்த அனைத்து திட்டங்களுக்கும் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து ஆதரவு நல்கும் எனவும் ஜக்தீப் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பினாங்கு இந்து அறப்பணி வாரிய தலைவர் ஆர்.எஸ்.என் இராயர், துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், ஆணையரான தினகரன் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இந்திய மாணவர்களின் கல்விக்கு அதிகமான நிதியுதவி வழங்கி வருவதை செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் தமதுரையில் குறிப்பிட்டார். மேலும், பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இந்தியர்களின் வளர்ச்சிக்கு தொடர்ந்து சேவையாற்றும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே, இந்தியர்கள் ஆழ்ந்த இடமான லெம்பா பூஜாங் இடத்திற்கு சென்று மாணவர்கள் இந்தியர்களின் சரித்திரத்தை அறிந்து கொள்ள நோக்கில் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது என பினாங்கு இந்து அறப்பணி வாரிய தலைவர் ஆர்.எஸ்.என் இராயர் தெரிவித்தார்.
இம்மாதிரியான திட்டங்கள் வாயிலால, இந்திய சமூகத்தின் வளர்ச்சியும் மேம்பாட்டினையும் நாம் தொடர்ந்து வலுப்பெற செய்வது முடியும் என அவர் சூளுரைத்தார்.