பாகான் – பினாங்கில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ‘ஸ்மார்ட்போர்டுகள்’ பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை மாநில அரசு தொடரும் என்று மாநில மனித மூலதன மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்தீப் சிங் டியோ தெரிவித்தார்.
ஜக்தீப் கருத்துப்படி, பினாங்கில் உள்ள 396 பள்ளிகளில், 148 இன்னும் ‘ஸ்மார்ட்போர்டுகள்’ பொருத்தப்பட வேண்டும்; ஆகவே, இதனை மாநில அரசு நிவர்த்தி செய்ய தொடர்ந்து முயற்சிகளை கையாளப்படும் என ஜக்தீப் கூறினார்.
இன்று டத்தோ ஹாஜி அமாட் படாவி மண்டபத்தில் உள்ள பினாங்கு அறிவியல் கிளாஸ்தர்@பாகானில் நடைபெற்ற ‘பினாங்கு 5G பள்ளி டிஜிட்டல் நூலகத் திட்டத்தின்’ இரண்டாவது அமர்வில் கலந்துகொண்ட ஜக்தீப் இதைப் பகிர்ந்துகொண்டார்.
“இந்த முயற்சியின் மதிப்பை மாநில அரசு அங்கீகரிக்கிறது.
“நாங்கள் முன்னோக்கி, கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதில் ஒரு ஒருங்கிணைப்பாளராக செயல்படுவோம், இதற்காக மத்திய அரசு உட்பட அனைத்து கூட்டாளர்களுடன் ஒன்றாக இணைந்து செயல்படுவோம்.
“எங்கள் மாணவர்களை ஸ்தெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) துறைகளில் ஈடுபட ஊக்குவிக்க விரும்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினரான ஜக்தீப், இந்த அமர்வில் கலந்து கொண்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் ஸ்தெம் துறையில் மாணவர்கள் பங்குபெற ஆதரவளிப்பதில் ஆசிரியர்களின் முக்கிய பங்கை அவர் உறுதிப்படுத்தினார்.
பினாங்கு 5ஜி பள்ளி டிஜிட்டல் நூலகத் திட்டத்தை’ முக்கிய பங்குதாரரான 88 கேப்டன் நிறுவனத்தையும் அவர் பாராட்டினார்.
88 கேப்டன் நிறுவனத்யின் தலைவர் டத்தோஸ்ரீ ஓய் எங் ஹாக், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள் டிஜிட்டல் நூலக உபகரணங்களை முழுமையாகப் பயன்படுத்துமாறு வலியுறுத்தினார்.
“எங்களிடம் இன்னும் 40 பள்ளிகள் வரிசையில் உள்ளன, மேலும் இந்த ஜூலை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கூடுதல் இலவச இணையத்தள இணைப்புகளை மத்திய அரசு வழங்கத் தொடங்கியதைக் கேட்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், மாநில கல்வித் துறை (ஜே.பி.என்) பிரதிநிதி சைபுல் நிஜாம் ராம்லீ கூறுகையில், டிஜிட்டல் மயமாக்கல் வசதிகள் இல்லாத எந்தப் பள்ளியும் உதவிக்கு மாநில கல்வித் துறையை அணுகலாம் என்றார்.
இந்த திட்டம் பினாங்கு 88 கேப்டன் நிறுவனம், YTL கம்யூனிகேஷன்ஸ் தனியார் நிறுவனம், SNS இணையதள தொழில்நுட்பம் நிறுவனம், இன்தெல் மலேசியா, பினாங்கு அறிவியல் கிளாஸ்தர் மற்றும் OCBC வங்கி ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.