மாநில அரசு இந்த ஆண்டுக்கான வருவாய் வசூல் அதிகரிக்க இலக்கு – முதலமைச்சர்

Admin
whatsapp image 2024 05 30 at 3.59.05 pm

 

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு ரிம28.66 மில்லியன் உண்மையான நிதி உபரியாக (surplus) பதிவு செய்துள்ளது. இது வெற்றிகரமாக வசூலிக்கப்பட்ட ரிம342.60 மில்லியன் நிதியில் இந்த ஆண்டு மே,29 வரை செலவிடப்பட்ட ரிம313.95 மில்லியன் நிதியைத் தாண்டியது.

மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் மாநில அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட பற்றாக்குறையைக் குறித்து சில மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் (ADUN) எழுப்பிய கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்தார்.

“மாநில அரசாங்கம், மாநிலப் பற்றாக்குறையான ரிம1.047 பில்லியனில் இருந்து ரிம863.10 மில்லியனாகக் குறைப்பதற்கானத் திட்டங்களை செயல்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

“இந்தப் பிரதான திட்டம் மாநிலத்தின் நிதி உபரியை கட்டுப்படுத்த உதவும் கட்டுப்பாட்டு நடவடிக்கையாகும்.

“மாநில அரசு சார்ந்த துறைகள், ஏஜென்சிகள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் துணை நிறுவனங்கள் 2024 இல் செலவினத்தில் சீரமைப்பு ஒழுங்குமுறைக்கு இணங்கி செயல்பட்டால், இத்திட்டத்தின் மூலம் மாநில அரசு ஆண்டு இறுதியில் உண்மையான பற்றாக்குறையில் இருந்து விடுப்பட முடியும் என மாநில முதலமைச்சர் 15வது சட்டமன்ற இரண்டாம் தவணைக் கூட்டத்தில் வழங்கிய தொகுப்புரையில் இவ்வாறு கூறினார்.

மாநில அரசு மாற்று நிதியுதவியாக மத்திய அரசின், மலேசிய நிதி அமைச்சு (MOF) மூலம் பெறுவதற்குப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக கொன் இயோவ் கூறினார்.

“நிதி அமைச்சு முந்தைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மாநிலத்தின் உண்மையான பற்றாக்குறையின் அடிப்படையில் மாநில அரசுக்கு முன்பணத்தை வழங்குவதும் இதில் அடங்கும்.
“மத்திய அரசிடம் கடனுதவிக்கு விண்ணப்பிப்பது மற்றொரு மாற்றுவழி திட்டமாக அமைகிறது. இது பெரிய அளவிலான திட்டங்கள் மற்றும் மக்களுக்கு நன்மைகள் வழங்கும் திட்டங்களைச் செயல்படுத்த மிகவும் பொருத்தமானது,” என்று அவர் கருத்து தெரிவித்தார்.

“இருப்பினும், 2019 முதல் 2023 வரை, மாநில அரசின் வருவாய் குறைவாகப் பதிவு செய்துள்ளது. இந்த ஐந்தாண்டு காலத்தில் வரி அல்லாத வருவாய் ரிம1.72 பில்லியன் மட்டுமே பெறப்பட்டுள்ளது.

“மேலும், மாநில அரசின் மொத்த செலவுகள் 2019 இல் ரிம581.31 மில்லியன், ரிம734.06 மில்லியன் (2020), ரிம730.90 மில்லியன் (2021), ரிம755.02 மில்லியன் (2022) மற்றும் ரிம951.75 மில்லியன், (2023) என அதிகரித்து வருவதைக் காண்பிக்கிறது,” என அவர் விளக்கமளித்தார்.

மாநில அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் போன்ற கடினமான தருணங்களை எதிர்கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து ரிம169.45 மில்லியன் செலவில் எட்டு வெள்ள நிவாரணத் திட்டங்கள் (RTB) செயல்படுத்தப்பட்டுள்ளன.

“2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தால் மாநில அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கோவிட்-19க்கு எதிரான பினாங்கு சிறப்பு நிதியுதவித் திட்டம் மூலம் மொத்தம் ரிம158.14 மில்லியன் செலவிடப்பட்டது.

“அதுமட்டுமின்றி, 2010-ஆம் ஆண்டு ரிம12.49 மில்லியன் ஒதுக்கீட்டில் இல் தொடங்கப்பட்ட i-Sejahtera சமூக நலத் திட்டம் 2023 இல் ரிம56.21 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது மாநிலத்தின் நிதி நிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

இருப்பினும், பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினருமான கொன் இயோவ், கடந்த ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் வருவாயை அதிகரிக்க மாநில அரசு நம்பிக்கை கொண்டுள்ளது என்று கூறினார்.

“மாநில முதலமைச்சர் கார்ப்ரேஷன் (CMI) மூலம் மாநில அரசு 2023 முதல் 2024 வரை மொத்தம் ரிம315.9 மில்லியன் முதலீட்டில் தனியார் நிறுவனங்களுடனான (PPP).கூட்டமைப்பில் பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.

“வருடாந்திர அடிப்படையில் பல்வேறு நோக்கங்களுக்காக நிலத்தை குத்தகைக்கு விடுதல் மற்றும் வாடகைக்கு எடுப்பதன் மூலம் வருவாய் அதிகரிக்கும்” என்று பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் சாவ் விளக்கமளித்தார்.

“நிலத்திற்கான குத்தகையை செலுத்துதல், நில வரி மற்றும் வரி அல்லாத கொடுப்பனவுகள் மற்றும் CMI குத்தகை மற்றும் வாடகை வருவாய் ஆகியவற்றிலிருந்து மாநில அரசு 2024 ஆம் ஆண்டில் ரிம420 மில்லியன் வருவாய் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.