மாநில அரசு உணவு விநியோக நிறுவனங்களுக்கு 6,000 முகக் கவசங்கள் சன்மானம்

Admin

ஜார்ச்டவுன் – மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் உணவு விநியோக நிறுவனங்களுக்கு முகக் கவசங்கள் சன்மானமாக வழங்கினார். கொம்தார், மலாயான் வங்கி அருகாமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூன்று உணவு விநியோக நிறுவனங்களான ‘டெலிவரி ஈட்’(Deliver Eat), ஃபுட் பண்டா (Food Panda) மற்றும் கிரேப் (Grab) தத்தம் 2,000 முகக் கவசங்கள் பெற்றுக்கொண்டனர்.

தற்போது கோவிட்-19 தொற்றுக்கிருமி பரவலைத் தொடர்ந்து நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைப் பிறப்பிக்கப்பட்டிருப்பதால் பொது மக்கள் இணைய வசதியுடன் (online) உணவு அழிப்பானைச் செய்ய வலியுறுத்தப்படுகின்றனர். எனவே, இந்த உணவு விநியோக நிறுவன ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாநில அரசு முகக் கவசங்களை சன்மானமாக வழங்கியது. உணவு விநியோகம் செய்யும் பணியாளர்கள் உடல் பாதுகாப்பு கூறுகளில் மிகுந்த கவனம் செலுத்தமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.

“மாநில அரசு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக்கட்டத்தில் உணவு விநியோக நிறுவனங்களுக்கு முகக் கவசங்கள் வழங்கியது பாராட்டக்குரியது. தற்போது இந்த முகக் கவசங்கள் பெறுவதற்கு மிக கடினமாக இருப்பதாகவும் தக்க தருணத்தில் மாநில அரசு உதவியது. மேலும், இந்நிறுவனம் பினாங்கின் 5 மாவட்டங்களிலும் செயல்படுகிறது, குறிப்பாக ஜார்ச்டவுன் வட்டாரத்தில் மட்டுமே ஏறக்குறைய 80 பணியாளர்கள் பணிப்புரிகின்றனர்,” என ‘டெலிவரி ஈட்’(Deliver Eat) பிரதிநிதி நதியா முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில் பினாங்கு முதல்வரின் அரசியல் செயலாளர் தே லாய் ஹெங், புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் வோங் ஒன் வாய், பினாங்கு கிராப் உணவு நிறுவன நிர்வாகி டேப்ன் லிம் பெங் சுவான் மற்றும் ஃபுட் பண்டா பிரதிநிதி ஹாகிமி கலந்து கொண்டனர்.