ஜூரு – பினாங்கு மாநில அரசு ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளி நில விவகாரத்தைத் தீர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.
இன்று ஜூரு பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற புக்கிட் தெங்கா தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட போது சாவ் இவ்வாறு கூறினார்.
“ஜுரு தோட்டத் தமிழ்ப்பள்ளி நில உரிமையாளருடன் பிரச்சனைகளை எதிர்கொள்கிறது என்பதை அறிந்தேன்.
“இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில், ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளி மேலாண்மை கழகத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ். செல்வகுமார், என்னையும் பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தையும் (பி.டி.சி.) சந்தித்துப் பேசினார்.
“இந்தச் சந்திப்பின் போது, இப்பள்ளியின் புனரமைப்பதற்கு புதிய நிலத்தைக் கண்டறிவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
“நாங்கள் இன்னும் இந்த விஷயத்தில் விவாதத்தில் இருக்கிறோம், சமூகத்திற்கு நல்ல செய்தியை விரைவில் கொண்டு வருவோம் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று சாவ் இந்நிகழ்ச்சியில் தனது உரையின் போது கூறினார்.
இது தவிர, நீர் வழங்கல், மின்சாரம், தொழில்துறை நிலங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு மாநில அரசு தொடர்ந்து செயல்படும் என்று சாவ் சூளுரைத்தார்.
அடுத்த ஜனவரி 10 முதல் 14 வரை திட்டமிடப்பட்ட தண்ணீர் தடையை பினாங்குவாசிகள் எதிர்கொள்வார்கள் என்றும், இந்த செயல்பாட்டின் வெற்றியை உறுதிசெய்ய முழு மனதுடன் ஒத்துழைப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையில், புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூய் சியாவ் லியோங், நமது பலமாக இருக்கும் பன்முகத்தன்மையை தொடர்ந்து பாதுகாக்குமாறு அனைவரையும் வலியுறுத்தினார்.
“ஒவ்வொருவரின் பண்டிகைகளைக் கொண்டாடும்போது பன்முகத்தன்மையே நமது பலம். மேலும் நமது வேறுபாடுகளை நாம் தொடர்ந்து கொண்டாடி நமது பன்முகத்தன்மையைப் பாராட்ட வேண்டும்.
“நாம் தொடர்ந்து நமது ஒற்றுமையைப் பேணி ஒருவருக்கொருவர் நமது உறவுகளை வலுப்படுத்த வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்
அதே நிகழ்ச்சியில் பேசிய மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழுவின் உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு, இந்திய சமூகம் ஒற்றுமையாக இருந்து அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.