மாநில அரசு தடுப்பூசி மையங்கள் மற்றும் மனித மூலதனம் அதிகரிக்க இலக்கு – முதல்வர்

Admin

பாயான் லெப்பாஸ்- பினாங்கு மாநிலத்தில் பேரளவில் இயங்கும் ஸ்பாய்ஸ் அரேனா தடுப்பூசி மையத்தின் முதல் நாள் சேவை சுமூகமாக நடைபெற்றது என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் தெரிவித்தார். 

பொது மக்கள் கூட்ட நெரிசல் இன்றி சுமூகமான முறையில் தடுப்பூசி பெற்றுக்கொண்டனர், என்றார். 

“இன்று முதல் தொடங்கப்பட்ட இந்த தடுப்பூசி மையத்தில் முதல் மூன்று நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 1,000 பேருக்கு தடுப்பூசி போடப்படும். கூடிய விரைவில் நாள் ஒன்றுக்கு 3,000 முதல் 5,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுமென,” என்று நம்பிக்கை கொள்வதாக முதல்வர் தெரிவித்தார். 

தற்போது பினாங்கு மாநிலத்தில்   112, 350 பேர்கள் இந்த ‘AstraZeneca’ தடுப்பூசி பெற விண்ணப்பித்துள்ளனர். அதில் 18-59 வயதுக்குள் 80,422 பேர்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 31,928 பேர்களும் இடம்பெறுகின்றனர். அவர்களுக்கு வருகின்ற ஜூன்,7 முதல் ஜூலை,27 வரை தடுப்பூசி கட்ட கட்டமாக செலுத்தப்படும். 

“மத்திய அரசாங்கம் பினாங்கு மாநிலத்திற்கு போதுமான தடுப்பூசி விநியோகிக்க ஒப்புதல் வழங்கியதை முன்னிட்டு மாநில அரசு தடுப்பூசி மையங்கள் மற்றும் மனித மூலதனத்தை அதிகரிக்க இலக்கு கொண்டுள்ளது. 

“தற்போது நாள் ஒன்றுக்கு  2,000 முதல் 5,000 பேர்களுக்கு தடுப்பூசி செலுத்த முனைப்புக் காட்டப்படும். இதன் மூலம் பினாங்கு மாநிலத்தில் வருகின்ற அக்டோபர் மாதத்திற்குள்  இந்த தடுப்பூசி திட்டம் செலுத்தும் இலக்கு அடையக்கூடும். 

“மேலும், அக்டோபர் மாதத்திற்கு பிறகு நாள் ஒன்றுக்கு 15,000 முதல் 20,000 பேர்களுக்கு தடுப்பூசி செலுத்த கூடும்,” என முதல்வர் கூறினார். 

பினாங்கு மாநிலத்தில் தனியார் மருத்துவமனை ஒருங்கிணைப்பில் செயல்படுத்தப்படும் தடுப்பூசி மைய பட்டியலில் ஆறாவது மருத்துவமனையாக ஒப்திமஃஸ் கண் மருத்துவமனை (Optimax Eye Specialist Hospital) இடம்பெறுகின்றது. 

மேலும் கூடுதல் தனியார் மருத்துவமனை மற்றும் கிளினிக் ஒருங்கிணைப்பு எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மற்றும் கிளினிக் இட வசதிக்கு ஏற்ப அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்படும்.  

இந்த சந்திப்புக் கூட்டத்தில் மாநில செயலாளர் டத்தோ அப்துல் ரசாக் பின் ஜாபார்; வேளாண்மை தொழில்நுட்பம் மற்றும் உணவு பாதுகாப்பு, கிராமப்புற வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் நோர் லேலா பின் அஃரிப்பின்; பிரதம துறை சிறப்பு ஆலோசகர் டான் ஸ்ரீ டாக்டர் ஜெமிலா மாமுட்; மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

“பினாங்கு மாநிலத்தில் இதுவரை 60 விழுக்காட்டினர் தடுப்பூசி பெற விண்ணப்பித்துள்ளனர் என்பது பாராட்டக்குறியது. எனவே, பொதுமக்கள் தொடர்ந்து தடுப்பூசி  பெற விண்ணப்பிக்க ஆர்வம் கொள்ள வேண்டும் என ஜெமிலா மாமுட் கேட்டுக் கொண்டார். 

லெ. சரோஜினி,66
“ஸ்பாய்ஸ் அரேனா தடுப்பூசி மையத்தில்  சுமூகமான முறையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பணியாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் வரவேற்பு மிகுந்த நம்பிக்கையை அளித்தது.

“தற்போதைய சூழலில் அனைவரும் தடுப்பூசி பெற முன் வர வேண்டும். இதன் மூலம் கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தை குறைக்க முடியும்,” என சரோஜினி,66 தெரிவித்தார். 


எஸ்.லோகன்பார், 65
“முதியவர்கள் தடுப்பூசி பெறுவதன் மூலம் கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து விடுபட முடியும். எனவே, தடுப்பூசி பெற விண்ணப்பிக்க வேண்டும். தற்போதைய சூழலில் கோவிட்-19 மிக வேகமாக பரவும் சூழலில் முதியவர்கள் சுகாதாரம் பாதுகாத்து தடுப்பூசி பெற வேண்டும், என்றார். 


பி.சந்தோஷ்,20
வருகின்ற ஜூலை,9ஆம் தேதி தடுப்பூசி மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக மாணவர் பி.சந்தோஷ்,20 தெரிவித்தார். 

அனைவரும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஓ.பி) கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தில் இருந்து விடுபடலாம், என்றார். 


சி. ஜஸ்வந்த் கவுர், 66
“ஸ்பாய்ஸ் அரேனா தடுப்பூசி மையத்தின் சேவை மிக துரிதமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. தடுப்பூசி பெற்றதில் மகிழ்ச்சி கொள்வதாக,” ஜஸ்வந்த் கவுர் தெரிவித்தார்.