ஜார்ச்டவுன் – “மாநில அரசு பி40 மற்றும் எம்40 தரப்பு மக்கள் சொந்த வீடு வாங்கும் இலக்கில் வாங்கும் சக்திக்கு உட்பட்ட ஏ, பி, சி -ரக வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 102,052 வீடுகள் அதாவது 29,959 வீடுகள் முழுமையாக கட்டப்பட்டுள்ளன; 23,567 வீடுகள் கட்டுமானத்தில் உள்ளன; 48,054 வீடுகள் மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ள ஒப்புதல் பெறப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மாநில அரசு அளித்த தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் குறிப்பிட்ட 75,368 வீடுகள் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளன,” என உள்ளூராட்சி, வீடமைப்பு மற்றும் நகர்புற & கிராமப்புற மேம்பாடு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார்.
மாநில அரசு பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக 18 வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் திட்டமிட்டுள்ளன. அதில் இந்த ஆண்டு 3 வீடமைப்புத் திட்டங்களான ஜீரான் ரெசிடன்சி, பட்டவொர்த், டுவா ரெசிடன்சி, தெலுக் கும்பார் மற்றும் தெ ராய்ஸ் எஸ் பி செல்லையா, ஜார்ச்டவுன் ஆகியவை முழுமைப்பெற்று பொது மக்களிடம் வீடுகள் ஒப்படைக்கப்படும் என 14-வது சட்டமன்ற இரண்டாம் தவணைக்கான முதல் கூட்டத்தொடர் தொகுப்புரையில் இவ்வாறு தெரிவித்தார்.
பினாங்கு மாநிலம் அனைத்துலக விவேக நகரமாக வருகின்ற 2025-ஆம் ஆண்டுக்குள் பிரகடனம் செய்யும் பொருட்டு தற்போது ஆறு திட்டங்கள் செயல்படுத்துகிறது. அவ்வகையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கி முதல் கட்ட விவேக வாகன நிறுத்தும் திட்டம் அமல்படுத்தப்படும். இத்திட்டத்தில் தீவுப்பகுதியில் 12,000 வாகன நிறுத்தும் இடங்களும் பெருநிலப் பகுதியில் 24,000 வாகன நிறுத்தும் இடங்களும் விவேக கார் நிறுத்தும் இடமாக உருமாற்றம் காணும். இத்திட்டம் விவேக செயல்பாடு மற்றும் ‘e-wallet’ – பயன்பாடு கொண்டு அமல்படுத்தப்படும் என டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் தெரிவித்தார்.
கடந்த 2016, ஜூன் மாதம் மாநில அரசு அறிமுகம் செய்த அடிப்படை கழிவுகளில் இருந்து தனிமைப்படுத்தும் திட்ட அமலாக்க நடவடிக்கையைக் கடினமாக கொண்டு வர வேண்டும் என புலாய் தீக்குஸ் சட்டமன்ற உறுப்பினர் லீ சுன் கிட் வலியுறுத்தினார். ஏனெனில், பொது மக்கள் மறுசுழற்சி திட்டத்தை பின்பற்றுவதில் தோல்வி எதிர்நோக்குவதால் இவ்வாறு கூறினார்.
“2016 முதல் மார்ச் 2018 வரை இத்திட்டத்தை அமல்படுத்தத் தவறிய 59 நில குடியிருப்பாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டன; ஊராட்சி மன்றம் செய்த சோதனையில் குப்பைகளை முறையாக மறுசுழற்சி செய்வதற்கு இடத்தை ஏற்பாடு செய்யாத 31 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டன; அடிப்படை கழிவுகளில் இருந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளாத வணிகத் தலங்களுக்கு 562 அபராத நோட்டீஸ் விடுக்கப்பட்டன,” என புலாவ் திக்கூஸ் தொடுத்த கேள்விக்கு ஜெக்டிப் சிங் தொகுப்புரையில் இவ்வாறு பதிலளித்தார்.