ஜூரு – பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ்,
புக்கிட் தெங்காவவில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பொது மக்களிடையே ஒற்றுமை, சகிப்புத்தன்மை மற்றும் சமூக நலன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பின்தங்கிய குடும்பங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பல பயனுள்ள முன்முயற்சி திட்டங்களையும் அறிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக பி40 குழுவைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு ரிம100 மதிக்க தக்க பள்ளிச் சீருடை பற்றுச்சீட்டும் விநியோகிக்கப்பட்டது. இது புக்கிட் தெங்கா ஒற்றுமைக் கழகம் மற்றும் புக்கிட் தெங்கா சட்டமன்ற சேவை மைய இணை ஏற்பாட்டில் வழங்கப்பட்டன.
“இந்த உன்னதமான முயற்சி, வசதிக் குறைந்த குடும்பங்களின் சுமையைக் குறைத்து, தேசத்தின் நம்பிக்கையான நம் குழந்தைகளுக்குச் சமமான கல்வி வாய்ப்பு கிடைப்பதை உறுதிசெய்கிறது,” எனக் கூறி ஏற்பாட்டுக் குழுவினரைப் பாராட்டினார்.
பெர்கம்புங்கான் ஜூரு பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில், பினாங்கு2030 இலக்கின் அடிப்படையில் இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல், பினாங்கு மக்களுக்கான மாநில அரசின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
அண்மையில் அறிவிக்கப்பட்ட மாநிலத்தின் 2025 வரவு செலவு திட்டமானது பினாங்கின் வரவு செலவு வரலாற்றிலே மிகக் குறைந்த பற்றாக்குறையைப் பதிவு செய்தப் போதிலும், மக்கள் நலனுக்கான அரசாங்கத்தின் சமூகநலத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
“பினாங்கு அரசாங்கம் நமது மக்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது, குறிப்பாக அடுத்த ஆண்டு வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான எங்கள் முயற்சிகள் அசைக்க முடியாததாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.
ஜூரு-சுங்கை டுவா உயர்மட்ட நெடுஞ்சாலைத் திட்டத்தின் முன்னேற்றத்தையும் சாவ் எடுத்துரைத்தார்.
நமது சமூகத்தில் நல்லிணக்கத்துடன் இணைந்திருக்கும் கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளின் பன்முகத்தன்மை பெருமைக்குரியது. இதனை ஊக்குவிக்கும் வகையில் தீபாவளி போன்ற பண்டிகை திறந்த இல்ல உபசரிப்புகள் வலியுறுத்துகிறது.
சமூக வளர்ச்சிக்கு பங்களிக்க அதிகமன தன்னார்வலர்கள் முன் வர வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
கல்வி என்பது வசதிக் குறைந்த மக்களுக்கு ஒரு சுமையாக கருதப்படாமல் இருப்பதை உறுதி செய்ய இது போன்ற திட்டங்கள் மிக அவசியமாகும். தேவைப்படுபவர்களுக்கு உதவ பல அரசு சாரா நிறுவனங்கள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
பினாங்கில் அமைதி, அன்பு மற்றும் நல்லிணக்கம் நிறைந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தி அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
“இந்த தீபத் திருநாள் அனைத்து பினாங்கு வாழ் மக்களின் வாழ்விலும் பிரகாசத்தை வீசட்டும். ஒன்றாக, மலேசியாவை மட்டுமல்ல, உலகத்தையே பிரமிக்கும் ஒரு மாநிலமாக பினாங்கை உருவாக்க முயற்சியைத் தொடருவோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர்
கூய் சியாவ்-லியோங் கூறுகையில், தீபாவளிக் கொண்டாட்டம் இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியை எடுத்துக்காட்டுகிறது, இது அனைவருக்கும் நம்பிக்கையையும் ஒற்றுமையையும் வலுப்பெற திறவுக்கோளாக அமைகிறது.
“மேலும், பினாங்கில் உள்ள மற்ற சமூகங்களைப் போலவே இந்தியச் சமூகமும் மாநிலத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
மேலும் மலேசிய குற்றத்தடுப்பு அறக்கட்டளை (MCPF) பினாங்கு துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ கே.புலவேந்திரன் மற்றும் இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஆர்.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.