பாடாங் லாலாங் – பினாங்கு மாநில அரசு, இம்மாநில மக்கள் சொந்த வீடு வாங்க உதவும் வகையில் வாடகைக் கொள்முதல் திட்டங்களைச் செயல்படுத்த தொடர்ந்து துரிதப்படுத்தப்படும்.
வீட்டுவசதி, உள்ளாட்சி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ கூறுகையில், இன்றுவரை மொத்தம் 3,451 வீடுகள் இந்த முறையின் கீழ் தகுதியானவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன, என்றார்.
“மாநில அரசு மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு வகையான வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளின் எண்ணிக்கையை குறிப்பாக வாடகை கொள்முதல் திட்டங்கள் மூலம் தொடர்ந்து அதிகரிக்க இணக்கம் கொண்டுள்ளது.
“அனைவரும் அறிந்தப்படி, மாநில அரசு 2030 ஆம் ஆண்டுக்குள் 220,000 வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் நிர்மாணிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இதில் 10 சதவீதம் அதாவது 22,000 வீடுகள் வாடகை கொள்முதல் திட்டம் மூலம் வழங்கப்பட இணக்கம் கொண்டுள்ளது.
“இதுவரை 3,451 வீடுகள் அல்லது (15.67%) வாடகைக் கொள்முதல் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன,” என்று டேசா வவாசான் மக்கள் வீடமைப்பு (பி.பி.ஆர்) குடியிருப்புக்கு வருகை அளித்த போது இவ்வாறு கூறினார்.
மேலும், செபராங் பிறை மாநகர் கழக உறுப்பினர்கள்; பினாங்கு மாநில வீட்டுவசதி வாரியத்தின் (LPNPP) தலைவர், அய்னுல் ஃபாதிலா சம்சுடி மற்றும் டேசா வவாசான் குடியிருப்பாளர் சங்கத்தின் தலைவர், முகமது சனுசி அஹ்மத் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பி.பி.ஆர் டேசா வவாசான் குடியிருப்பாளர்களின் வசதிக்காக புதிய வசதிகளை மேம்படுத்த பினாங்கு மாநில அரசு இந்த ஆண்டு ரிம150,000 நிதி ஒதுக்கீடு வழங்குவதாக, ஜெக்டிப் தெரிவித்தார்.
“சேதமடைந்த ‘paip ketumpatan tinggi polietilena’ (HDPE) குழாய்களை மாற்றுவதற்காக இந்த ஒதுக்கீடு பயன்படுத்தப்படும்.
“எனவே, மாநில அரசு மேம்படுத்தும் இந்தப் புதிய வசதியை அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் கவனமுடன் பாதுகாக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
ஜெக்டிப் கூறுகையில், மாநில அரசு 2008 முதல் 2021, டிசம்பர்,31 வரை பி.பி.ஆர் டேசா வவாசான் குடியிருப்புப் பராமரிப்புப் பணிகளைச் செயல்படுத்துவதற்காக ரிம7.9 மில்லியன் ஒதுக்கியுள்ளது, என்றார்.
“சாயம் பூசுதல், நடைபாதை மேம்படுத்துதல், அஞ்சல் பெட்டிகளை மாற்றுதல் மற்றும் பல இந்தப் பராமரிப்புப் பணிகளில் இடம்பெறுகின்றன.
“அது தவிர, ஏ மற்றும் பி புலோக்-களில் உள்ள மின் தூக்கிகளை மேம்படுத்துதல்; சாலைகள் அமைத்தல்; பம்ப் அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் பிற வீட்டுவசதி பராமரிப்பு திட்டத்தின் மூலம் பி.பி.ஆர் டேசா வவாசான் வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்காக மொத்தம் ரிம1.55 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது,” என்று ஜெக்டிப் செய்தியாளர்களிடம் விவரித்தார்.
இந்நிகழ்ச்சியில், டேசா வவாசான் அடுக்குமாடியைச் சேர்ந்த 180 குடியிருப்பாளர்களுக்கு உணவுக்கூடைகள் வழங்கப்பட்டன. பினாங்கு மாநில வீட்டுவசதி வாரியத்தின் (LPNPP) மூலம் மாநிலம் முழுவதும் உள்ள ஒன்பது பொது வீடமைப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படும் 1,000 உணவுக் கூடைகளின் ஒரு பகுதியாக இது திகழ்கிறது.