புலாவ் தீக்கூஸ் – மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ்
2023 முதல் 2028 வரையிலான மாநிலத்தின் ஐந்தாண்டு வளர்ச்சித் திட்ட ஆவணம் எனும் பொருளாதார சுற்றுச்சூழல் மேம்பாட்டு வியூகத் திட்டமான ‘பினாங்கு SEED’-ஐ தொடக்கி வைத்தார்.
நிலம், பொருளாதார மேம்பாடு மற்றும் தகவல் தொடர்புக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான கொன் இயோவ், செய்தியாளர்களிடம் பேசுகையில், 2018 ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட பினாங்கு2030 இலக்கின் தொடர்ச்சியாக இந்த பினாங்கு SEED (2023-2028) ஐந்தாண்டுக்கான திட்டம் திகழ்கிறது.
“இது (பினாங்கு SEED 2023-2028) ஒரு தொடர்ச்சிதான்… எந்தவொரு நிர்வாகத்திலும் குறிப்பாக நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் இரண்டிலும், ஒரு முன்வரைவுத் திட்டம் (blueprint) உள்ளது.
“முன்வரைவுத் திட்டம் ஒரு திட்டத்தை செயல்படுத்துவதற்கான வேலைகளின் பதிவைக் குறிக்கிறது,” என்று அவர் அருகில் உள்ள பினாங்கு இன்ஸ்டிடியூட்டில் ‘பினாங்கு SEED’ அறிமுக விழாவில் இவ்வாறு கூறினார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில், பினாங்கு2030 இலக்கில் இடம்பெற்ற கடந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் அனைத்து சவால்கள் மற்றும் தடைகளையும் கணக்கில் கொண்டு, SEED 2023-2028 திட்டத்தில் சில கூறுகள் அதிகரிக்கப்பட்டன அதேவேளையில் சில கூறுகள் தகர்த்தப்பட்டன, என்றார்.
எனவே, பாடாங் கோட்டா மாநில சட்டமன்ற உறுப்பினரும், பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், பினாங்கு SEED 2023-2028 இன் முறையான ஆவணமானது, சம்பந்தப்பட்ட அனைத்து ஏஜென்சிகளும் மாநிலத்தின் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வியூக மேம்பாட்டு செயல் திட்டத்தை செயல்படுத்த இது துணைபுரியும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
அதற்கு முன், மாநில முதலமைச்சருடன் பினாங்கு இன்ஸ்டிடியூட் இயக்குநர் டத்தோ டாக்டர் ஓய் கீ பெங் இணைந்து அதிகாரப்பூர்வ ஆவணமான பொருளாதார சுற்றுச்சூழல் மேம்பாட்டு வியூகத் திட்டம் அல்லது பினாங்கு SEED-ஐ தொடக்கி வைத்தனர்.
இதற்கிடையில் கொன் இயோவ் கூறுகையில், பொருளாதார யதார்த்தம் மற்றும் பினாங்கில் தற்போதைய வளர்ச்சி அம்சங்கள், கொள்கை ஆவணங்கள், மாநில அரசின் நிலைப்பாடுகள் மற்றும் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களின் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ‘பினாங்கு SEED’ தயாரிக்கப்பட்டது.
பினாங்கு SEED 2023-2028 பற்றிய அறிமுகம் மற்றும் விளக்கக்காட்சியில், முதலாம் துணை முதலமைச்சர் டத்தோ Ir. அஹ்மத் சாக்கியுடின் அப்துல் ரஹ்மான்; இரண்டாம் துணை முதலமைச்சர், பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி; மாநில நிதி அதிகாரி மதிப்புமிகு ஜாபிதா சஃபர் மற்றும் செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) மேயர் டத்தோ அசார் அர்ஷாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.