ஜார்ச்டவுன் – பினாங்கு சட்டமன்ற கூட்டத்தில் மாநில மற்றும் மத்திய அரசாங்கம் இடையிலான நிர்வாகம் மற்றும் நிர்வாகப் பணிகளை மேம்படுத்த ஒரு சிறப்புக் குழுவை நிறுவுவதற்கானத் தீர்மானத்திற்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் அவர்களால் முன்மொழியப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட இத்தீர்மானம் மாநில சட்டப் சபையின் விதிமுறைகளுக்கு இணங்க அமைகிறது.
பினாங்கு 14வது பொதுத் தேர்தல் வாக்குறுதியில் பட்டியலிட்ட பொதுப் போக்குவரத்து, சமூக நலன், சுற்றுச்சூழல் மற்றும் மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய நியாயமான ஒதுக்கீடுகள் ஆகியவை பெறுவதற்கு மாநிலத்திற்கு அதிக அதிகாரம் வழங்க இந்தக் குழு செயல்படும்.
“சமீபத்திய ஆண்டுகளில் அரசியல் நிலையற்ற தன்மை மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் தாக்கம் மக்களின் வாழ்வாதாரத்தை அதிகமாகப் பாதித்தது. எனவே, மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கு இடையிலான அதிகாரத்தை மறுசீரமைப்பது அவசியம்.
“மாநில மற்றும் மத்திய அரசாங்கம் இடையிலான பிரச்சனைகளை அடையாளம் காணவும், வளங்களின் நியாயமான விநியோகத்தின் அவசியத்தைக் கண்டறியவும் இந்த சிறப்புக் குழு அமைக்கப்படும்.
மாநில அரசாங்கத்தின் அதிகாரத்தை அங்கீகரிக்கவும், மாநில மற்றும் மத்திய அரசாங்கம் இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதும் இக்குழுவின் பிரதான குறிக்கோள்,” என்று அவர் தீர்மானத்தைத் தாக்கல் செய்யும் போது கூறினார்.
கூட்டரசு அரசியலமைப்பின் கீழ் மத்திய அரசிடமிருந்து ஒதுக்கீடு பெறுவதற்கான அதன் கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பற்றி ஆலோசித்தல்; ஒதுக்கீடுகளை நியாயமான முறையில் விநியோகிக்கக் கோருதல்; மத்திய அரசின் கணக்குகளில் வெளிப்படைத் தன்மையைப் பின்பற்றுதல்; மாநில மற்றும் மத்திய அரசாங்க இடையே பகிரப்படும் வருவாய்கள் பற்றிய வெளிப்படையான விவாதங்கள்
ஆகியவை இக்குழுவின் அமைப்பிற்கான பிற நோக்கங்களாகும்.
இக்குழுவில் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ப. இராமசாமி; சுங்கை டுவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் யூசோஃப் முகமட் நூர்; புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூய் சியோ-லியுங்; பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, மாச்சாங் புபோக் சட்டமன்ற உறுப்பினர் லீ கை லூன், பெர்மாத்தாங் பாசிர் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது ஃபைஸ் ஃபட்சில்; பெர்தாம் சட்டமன்ற உறுப்பினர் காலித் மெஹ்தாப் முகமது இஷாக்; பெனாகா சட்டமன்ற உறுப்பினர் முகமட் யூஸ்னி மாட் பியா மற்றும் கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தேய் லாய் ஹெங் ஆகியோர் இடம்பெறுவர்.
“புதிய பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவியேற்றதன் மூலம், பினாங்கு மாநிலம் போதுமான வளங்கள் பெற முடியும்,” என்று கூய் கூறினார்.
கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே எழுந்து நின்று இக்குழு அமைப்பதற்குப் பாராட்டுத் தெரிவித்தார்.