- பாகான் ஜெர்மால் – பினாங்கு மாநில அளவிலான நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் மாநில ஆளுநர் மாண்புமிகு (TYT) துன் அஹ்மத் புஃஸி அப்துல் ரசாக் மற்றும் அவரது துணைவியார் தோஹ் புவான் கத்தீஜா முகமது சிறப்பு வருகையளித்தனர்.
பினாங்கு மாநில 15வது சட்டமன்றக் காலவரையறையில், பல முக்கியமான மாநிலத் திட்டங்கள் சுமூகமாக நடைபெற்று நிறைவேற்றப்படும் என்று மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் நம்பிக்கை தெரிவித்தார்.
“பினாங்கு சிலிக்கான் தீவுத் திட்டத்தின் கீழ் 100 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் உள்ளது, அது இந்த ஆண்டு இறுதிக்குள் தொழில்துறை நோக்கங்களுக்காக விற்கப்படும்; முத்தியாரா இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டம்; ஜூரு – சுங்கை டுவா உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலைத் திட்டம் இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் செயல்படுத்தப்படும், மேலும் 2030 இல் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; தொகுப்பு 1 – தஞ்சோங் பூங்காவிலிருந்து தெலுக் பஹாங் வரையிலான வடக்கு கடற்கரை இரட்டைச் சாலை (NCPR) அடுத்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இப்போது, தெற்கு செபராங் பிறை (SPS) பகுதியில் நீர் விநியோகத்தை மேம்படுத்தும் பேராக் – பினாங்கு நீர் திட்டத்தின் நிலை மற்றும் அறிவிப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” என முதலமைச்சர் சாவ் தெரிவித்தார்.
“10 வருட போராட்டத்திற்குப் பிறகு, நான் முதலமைச்சராக பணியாற்றும் காலத்தில் பல பெருந்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, எனது மீதமுள்ள பதவிக் காலத்தில், மாநிலத்தின் முக்கிய திட்டங்கள் சீராக இயங்குவதையும், அவை நிறைவேற்றப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
“நிச்சயமாக, இந்தப் போராட்டத்திற்கு அனைத்து பினாங்கு வாழ் மக்களின் வலுவான ஆதரவும் அவசியம். இதனால் எங்களையும் தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தையும் தொடர்ந்து நம்பிக்கையுடன் ஆதரவு அளிக்க வேண்டும்,” என்று நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் விளக்கமளித்தார்.
அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஏப்ரல்,9 முதல் அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட வரி விகிதங்களைத் தொடர்ந்து, உலகளாவிய பொருளாதார நிலைமையை நிவர்த்திச் செய்ய மத்திய அரசாங்கத்துடன் இணைந்து தனது நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் என்று கொன் இயோவ் கூறினார்.
“மத்திய அரசாங்கத்தின் முன்முயற்சிக்கு ஏற்ப, மாநில அரசும் சூழ்நிலையைக் கையாள்வதில் முன்னெச்சரிக்கை மற்றும் தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
“இந்த வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 2025 பிப்ரவரி மாதத்தில் நாட்டின் முக்கிய ஏற்றுமதி பங்களிப்பாளராக ரிம9.3 பில்லியன் மதிக்கதக்க பினாங்கின் நிலை கடுமையாக பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது.
“எனவே, மாநிலப் பொருளாதார சந்திப்புக் கூட்ட மன்றம் கீழ் முதலமைச்சர் அலுவலக முன்முயற்சி மற்றும் சிறப்பு அமைப்பின் ஏற்பாட்டில், தொழில்துறை, கல்வித்துறை மற்றும் மாநிலத் தலைமையுடன் நாளை (வெள்ளிக்கிழமை) கலந்துரையாடல் நடைபெறும்,” என்று பாடாங் கோத்தா மாநில சட்டமன்ற உறுப்பினரும் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் விளக்கமளித்தார்.
முன்னாள் முதலமைச்சரும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங்; பினாங்கு மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ ஸ்ரீ லாவ் சூ கியாங் மற்றும் அவரது துணைவியார் டத்தின் ஸ்ரீ தியோ ஹூய் துவாங்; துணை முதலமைச்சர், டத்தோ டாக்டர் முகமட் அப்துல் ஹமிட் மற்றும் அவரது மனைவி டத்தின் நோராய்னி அப்துல் ஜலீல்; மற்றும் மாநில செயலாளர் சுல்கிஃப்லி லாங், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களும் அடங்குவர்.
மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத் துறைத் தலைவர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தினரிடமிருந்து விருந்தினர்களை வரவேற்க 20க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகளுடன் மொத்தம் 15 உணவுக் கடைகள் அமைக்கப்பட்டதாக அறியப்படுகிறது.