ஜார்ச்டவுன் – இன்று கொண்டாடப்படும் விசாக தினத்தை முன்னிட்டு ஜாலான் கம்பாரில் உள்ள மஹிந்தராம புத்த கோவிலுக்கு மாநில வீட்டுவசதி, உள்ளாட்சி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ ரிம 5,000-ஐ நன்கொடையாக வழங்கினார்.
இக்கொண்டாட்டத்தின் போது பக்தர்கள் கோயில்களுக்குள் செல்ல அனுமதி இல்லை, மேலும் வழக்கமாக இடம்பெறும் புத்தர் அலங்கரிக்கப்பட்ட மிதவை ஊர்வலத்திற்கும் எம்.சி.ஓ 3.0 இன் கீழ் கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை (எஸ்.ஓ.பி) நிர்ணயிக்கப்பட்டதால் அதில் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்கப்படவில்லை. ஆகவே, டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் பிரதிநிதிகளின் அகம் மலர செய்ய மானியம் வழங்குவதாக கூறினார்.
“இது அனைவருக்கும் உண்மையிலேயே ஒரு சவாலான காலமாகும், குறிப்பாக புதிய கோவிட் -19 வழக்குகள் தற்போது குறைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
“தொற்றுநோய் இல்லாத நாட்களில் இந்த விசாக தினக் கொண்டாட்டம் புத்தர் கோயில்களில் நாடு தழுவிய அளவில் பக்தர்கள் புடை சூழ அங்கு நடைபெறும் பிரமாண்டமான சடங்குகள் மற்றும் ஊர்வலங்களில் பங்கேற்பார்கள்.
“ஆனால் எதிர்பாராத சூழ்நிலை காரணமாக, தொற்றுநோய் மேலும் பரவுவதை தடுக்க இது போன்ற தியாகங்கள் மிக முக்கியமானதாக அமைகிறது.
“இது என்னிடமிருந்து வழங்கப்படும் ஒரு சிறிய பங்களிப்பாகும். மேலும், இந்த கோயில் நிர்வாகம் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய உதவ வேண்டும்,” என்று ஜெக்டிப் தனது செய்தியாளர்களிடம்
மஹிந்தராம புத்த கோவிலுக்கு வருகையளித்த போது இவ்வாறு குறிப்பிட்டார்.
தேசிய ஒற்றுமை அமைச்சு (கே.பி.என்) கடந்த மே,21 அன்று விசாக தின கொண்டாட்டத்திற்கு பல எஸ்.ஓ.பி-கள் அறிவித்துள்ளது. இதில் தலைமை துறவி மற்றும் 10 குழு உறுப்பினர்கள் மட்டுமே கோவில் சடங்குகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் என்றும் ஒரு கோவிலுக்கு ஒரு சடங்கு அமர்வு காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2 .00மணி வரை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது.
மஹிந்தராம புத்த கோவிலுக்கு ஜார்ச்டவுன் காவல்துறை துணை ஒ.சி.பி.டி அதிகாரி சரவணன் மற்றும் கோவில் துணைத் தலைவர் டாக்டர் சூர்யா ஆகியோர் வருகையளித்தனர்.
இதனிடையே, பினாங்கில் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தையும் செழிப்பையும் உறுதி செய்வதற்காகவும், நமது மாநில மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் அதே வேளையில், பினாங்கு மாநில அரசு இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தள நிதியத்தின் (ரிபி) ஒதுக்கீட்டை தொடர்ந்து நிதியுதவி வழங்குகிறது.
2016 முதல் இன்று வரை மொத்தம் ரிம 7,808,444.44 நிதியினை பினாங்கு முழுவதும் உள்ள பல்வேறு சீன மற்றும் புத்த கோவில்கள், இந்து கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் குருத்வாராக்கள் என 187 விண்ணப்பங்களின் வாயிலாக பகிர்ந்தளிக்கப்பட்டது.