பினாங்கு இந்தியர் சங்கத்தின் ஏற்பாட்டில் முதல் முறையாக பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் இடையிலான பூப்பந்து போட்டி அண்மையில் பினாங்கு அறிவியல் பல்கலைகழக விளையாட்டு அரங்கத்தில் இனிதே நடைபெற்றது. பினாங்கு இந்தியர் சங்கம் பினாங்கு வாழ் இந்தியர்களுக்கு அரிய பல சேவைகள், போட்டி விளையாட்டுகள் என பல சமூகநல நிகழ்வுகளை சிறப்பாக நடத்திவருகிறது.
அவ்வகையில் பினாங்கு தமிழ்ப்பள்ளி மாணவர்களை விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்கும் ஆர்வத்தைத் தூண்டவும் மேம்படுத்தவும் இப்பூப்பந்து போட்டி விளையாட்டு ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்ததாக தமது சிறப்புரையில் கூறினார் பினாங்கு இந்தியர் சங்க விளையாட்டுப் பிரிவு தலைவர் டாக்டர் கலைகுமார். சுமார் 14 தமிழ்ப்பள்ளிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு பூப்பந்து போட்டிகளில் கலந்து சிறப்பான ஆட்டத்தை ஆடினர். அதோடு, சில குழுக்களுக்கு இடையே நட்பு பூப்பந்து ஆட்டமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்திய மாணவர்களுக்குப் போட்டி விளையாட்டின் முக்கியதுவத்தையும் அதனை கையாளும் விதத்தைப் பற்றிய விழிப்புணர்வை மேலோங்கும் அம்சமாக இவ்விளையாட்டு போட்டி அமைந்தது என்று இதன் ஏற்பாட்டு குழுத் தலைவர் திரு.சண்முகன் தெரிவித்தார். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் போட்டி விளையாட்டுகளில் ஆர்வத்தை மேலோங்க பெற்றோர்களும் ஆசிரியர்களும் முக்கிய பங்காற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பெண்களுக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாகை சூடினர். ஆண்களுக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாகை சூடியது பாராட்டக்குறியதாகும். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றி கோப்பையும் சான்றிதழும் எடுத்து வழங்கினார் பினாங்கு இந்தியர் சங்க தலைவர் திரு. ஆனந்த கிருஷ்ண நாயுடு அவர்கள்.