மூல நீர் தற்செயல் திட்டம் 2030 பினாங்கின் நீர் விநியோகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும்

 

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு பினாங்கு நீர் விநியோக வாரியத்தின் (PBAPP) மூலம் இம்மாநிலத்தில் நீர் விநியோக பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மூல நீர் தற்செயல் திட்டம் 2030 (RWCP 2030) உட்பட பல நீர் விநியோக உள்கட்டமைப்பு திட்டங்களைச் செயல்படுத்த உத்வேகம் கொள்கிறது.

பேராக் மாநிலத்தைத் தவிர புதிய நீர் ஆதாரங்களைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு மற்றும் ஆய்வுகள் தொடர்பான செலவுகள் குறித்து பத்து உபான் மாநில சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் கேட்ட கேள்விக்கு, உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜைரில் கிர் ஜோஹாரி சட்டமன்ற கூட்டத்தொடர் கேள்வி பதில் அங்கத்தில் பதிலளித்தார்.

“RWCP 2030 என்பது பினாங்கு நீர் விநியோக முன்முயற்சி 2050 (PWSI 2050) இன் ஒரு பகுதியாகும் மற்றும் RWCP 2030 இன் முக்கிய நீர் விநியோக பொறியியல் திட்டங்கள் 2022 முதல் 2028 வரை செயல்படுத்தப்படும்.

இரண்டாம் பிரிவின் கீழ் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் தொட்டி நாளொன்றுக்கு 91 மில்லியன் லிட்டர் (JLH); தொகுப்பு 12A, சுங்கை டுவா LRA; கூடுதல் புதிய நீர் சுத்திகரிப்பு தொகுதிகள் (114 JLH), மெங்குவாங் அணை LRA கட்டம் 1 (114 JLH), சுங்கை மூடா LRA கட்டம் 1 (114 JLH), சுங்கை பிறை நீர் விநியோக திட்டம் (136 JLH) மற்றும் சுங்கை கிரியான் நீர் விநியோக திட்டம் (114 JLH) ஆகியவை சம்பந்தப்பட்ட திட்டங்களில் அடங்கும்:

“மேலும், பேராக் நதியைத் தவிர வேறு புதிய நீர் ஆதாரங்களை ஆராய்வதில், மாநில அரசும், பினாங்கு நீர் விநியோக வாரியமும், நீர்த் தொழில் வல்லுனர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் பல கலந்துரையாடல் அமர்வுகளை நடத்தியிருக்கின்றன,” என்று தஞ்சோங் பூங்கா சட்டமன்ற உறுப்பினருமான ஜைரில் கூறினார்.

அதே அமர்வில், கடல்வழி சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கினால், குறிப்பாக குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் உள்ள பாதையில் செயல்படுத்தப்படும் நிவாரணத் திட்டம் குறித்த சுங்கை புயு சட்டமன்ற உறுப்பினர் பீ சின் டிசேவின் கேள்விகளுக்கும் ஜைரில் பதிலளித்தார்.

“இத்திட்டத்தை செயல்படுத்தும் போது கட்டுப்பாட்டு முறைகள் மற்றும் நிவாரணத் திட்ட நடவடிக்கைகள் பற்றிய திட்டமிடல் பூர்வாங்க விரிவான வடிவமைப்பு முடிந்த பின்னரே இது தீர்மானிக்கப்படும்.

“இந்த விரிவான வடிவமைப்பு சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீடு (DEIA) அறிக்கையில் சமர்ப்பிக்கப்படும் மற்றும் அனைத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் DEIA அறிக்கையின் ஒப்புதலுக்கு பின்னரே செயல்படுத்தப்படும்.

“இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு மட்டும் அல்லாமல், சுற்றுச்சூழல் அமைப்பு, சமூகம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றின் தாக்கம் உட்பட அனைத்து திட்டத்தையும் உள்ளடக்கியுள்ளது,” என்று ஜைரில் தெரிவித்தார்.