தெலோக் ஆயிர் தாவார் – பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் செபராங் பிறை மாநகர் கழகத் தலைவர் மேயர் டத்தோ ரோசாலி மற்றும் அக்கழக உறுப்பினர்களுடன் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அண்மையில் மாநில அரசின் முயற்சியில் மேம்படுத்தப்பட்ட ரோபினா சுற்றுச்சூழல் பூங்காவில் உள்நாட்டு கலைஞர்களால் புதிதாக இணைக்கப்பட்டுள்ள சுவர் ஓவியங்களையும் முதல்வர் பார்வையிட்டார். இக்கலை வடிவங்கள் இப்பூங்காவிற்கு மற்றொரு சிறப்பு அம்சமாகத் திகழும் என மாநில முதல்வர் புகழாராம் சூட்டினார்.
கடந்த ஜூலை மாதம், ரிம1.46 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் முழுமையாக மேம்படுத்தப்பட்ட ரோபினா சுற்றுச்சூழல் பூங்காவின் பொது வசதிகளைப் பார்வையிட்டதோடு ; அப்பூங்காவிற்கு வருகையளித்த பொது மக்களுடன் அளவளாவதற்கும் கோன் யாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.
முன்னதாக முதல்வர் சாவ் கொன் யாவ் தமதுரையில், 2021- ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரோபினா சுற்றுச்சூழல் பூங்காவின் தெற்கு பகுதியை மேம்படுத்த கூடுதல் ஒதுக்கீடு வழங்குவதற்கான எம்.பி.எஸ்.பி விண்ணப்பத்தை மாநில அரசு பரிசீலித்து வருவதாகக் கூறினார்.
“ரோபினா பூங்காவின் மேம்பாட்டுத் திட்டம் குறைந்த நிதி ஒதுக்கீட்டில் சிறந்த மேம்பாட்டுத் திட்டம் காணும் வல்லமை கொண்டதால் அத்திட்ட விண்ணப்பத்தை அங்கீகரிக்க முடியும்,” என நம்பிக்கை தெரிவித்தார்.
தற்போது, கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தால் அனைத்து தரப்பினரும் சவால் மிக்க சூழலை எதிர்நோக்கும் நிலையிலும் இம்மாநிலத்தின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என தனது நம்பிக்கையை முதல்வர் வெளிப்படுத்தினார்.
“பிற மாநிலங்களில் அரசாங்கத்தின் உறுதியற்ற தன்மையுடன் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் பினாங்கு மாநிலத்தின் எதிர்காலம் பிரகாசமாக அமையும், என்றார்.
“பினாங்கு மாநிலத்தின் சிறந்த எதிர்காலத்திற்கு தொடர்ந்து உருமாற்றுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்த உருமாற்றுத் திட்டங்கள் பொது மக்களால் வரவேற்கப்படும், என கூறினார்.
“மாநில அரசு திட்டமிடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த ஊராட்சி கழகத்தின் பங்கு அளப்பறியது. இம்மாநில அரசின் இலக்கை அடையும் வரை இத்திட்டங்கள் கட்ட கட்டமாக செயல்படுத்த ஊராட்சி கழகம் செயல்பட வேண்டும்.
“எனவே, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கான மாநில அரசின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் மாநகர் கழக உறுப்பினர்களும் பங்கு வகிக்க வேண்டும்,” என்று தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஆட்சிக்குழு உறுப்பினர் இயோ சூன் ஹின் கூறுகையில், ரோபினா சுற்றுச்சூழல் பூங்காவை மேம்படுத்திய செபராங் பிறை மாநகர் கழகத்தின் முயற்சியைப் பாராட்டினார். பொது பொழுதுபோக்கு இடங்களை மேம்படுத்துவதன் மூலம் மாநிலத்தில் சுற்றுலாத்துறையின் பன்முகத்தன்மையை அதிகரிக்கக்கூடும்.
“மாநில அரசால் தொடங்கப்பட்ட பினாங்கு சுற்றுலா வியூகத் திட்டமானது (பி.டி.எம்.பி) செபராங் பிறை பகுதியை மையமாகக் கொண்டுள்ளது.
“கோவிட் -19 தொற்றுநோய் தாக்கம் ஏற்படும் இச்சூழலில் மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் இந்த வியூகத் திட்டத்தில் ரோபினா சுற்றுச்சூழல் பூங்காவும் இடம்பெறுகிறது,” என இயோ சூன் இன் விளக்கமளித்தார்.