ஜெலுத்தோங் – அண்மையில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற சேவை மையத்தின் ஏற்பாட்டில் அவ்வட்டாரத்தில் வாழும் வசதிக்குறைந்த குடும்பங்களுக்கு அத்தியவசிய உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது. சுங்கை பினாங், டத்தோ கிராமாட் மற்றும் பத்து லஞ்சாங் சட்டமன்ற தொகுதிகளில் வசிக்கும் வசதி குறைந்த குடும்பங்கள் தத்தம் வட்டார சமூக மேம்பாட்டு மற்றும் முன்னேற்றக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வில் சிறப்புரை வழங்கிய ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர் ஒவ்வொரு மாதமும் இன, மத பேதமின்றி அம்மூன்று சட்டமன்ற தொகுதிகளில் வாழும் வசதிக்குறைந்த குடும்பங்களுக்கு வீட்டு அத்தியவசிய உதவிப்பொருட்களை வழங்குவதாக தமதுரையில் குறிப்பிட்டார். ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதியில் வாழும் 50 வசதி குறைந்த குடும்பங்களுக்கு ரிம 70 மதிக்கத்தக்க பரிசுக்கூடை எடுத்து வழங்கினார் மதிப்பிற்குரிய ஆர்.எஸ்.என் இராயர்.
இதனிடையே, அவ்வட்டாரத்தில் வாழும் குடும்பங்களுக்கு மூன்று சக்கர நாற்காலி, கல்வி சார்ந்த உதவிகள் மற்றும் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் ஜெலுத்தோங் நாடாளுமன்ற சேவை மையத்திற்கு நேரடியாக வருகையளிக்குமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டார். மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும் அவர்களின் பிரச்சனைகளை களைய தாம் முழுமூச்சாக பாடுபடவிருப்பதாக இராயர் சூளுரைத்தார்.