ஜார்ச்டவுன் – கம்போங் நிர்வாக செயல்முறை கழக (எம்.பி.கே.கே) உறுப்பினர்களின் ஒற்றுமையும் நல்லிணக்கமும் தான் எம்.பி.கே.கே கம்போங் மெலாயு 2020-ஆம் ஆண்டுக்கான வடகிழக்கு மாவட்டத்தின் சிறந்த எம்.பி.கே.கே என்ற வெற்றி வாகை சூட திறவுகோலாக அமைந்தது.
“2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த எம்.பி.கே.கே விருது என்பது ஒரு தனிநபரின் வெற்றியை சார்ந்தது அல்ல மாறாக அனைத்து தரப்பினரின் ஒற்றுமையால் கிடைக்கப்பெற்றது,” என எம்.பி.கே.கே கம்போங் மெலாயு தலைவர் அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.
“எங்கள் எம்.பி.கே.கே இந்த வட்டார பொது மக்களுக்கு சமூக மேம்பாடு மற்றும் சமூகநலன் உதவிகள் புரிவதில் முன்னுரிமை வழங்குவோம். கம்போங் மெலாயு வளாகத்தில் நடத்தப்படும் காலை மற்றும் இரவுச் சந்தைகளின் வாடகை வசூல் தொகையை ஒவ்வொரு மாதமும் பி-40 குழுவைச் சேர்ந்த ஏறக்குறைய 30 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்படும்,” என அக்கழகத்தின் செயற்குழு உறுப்பினரான அ.பிரான்சிஸ்கா முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
முதல்நிலை வெற்றியாளரான, எம்.பி.கே.கே கம்போங் மெலாயு வெற்றி கோப்பை, சுழற்கிண்ணம், ரிம3,000-கான ரொக்கப் பணம் மற்றும் நற்சான்றிதழ் வெற்றுக்கொண்டனர்.
எம்.பி.கே.கே லெபோ சுழியா இரண்டாம் நிலையும் எம்.பி.கே.கே டேசா பெர்மாத்தா மூன்றாம் நிலைக்கான வெற்று வாகையும் சூடினர்.
முதலாம் துணை முதல்வர் டத்தோ அமாட் ஸாக்கியுடின் 2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த எம்.பி.கே.கே விருதளிப்பு நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்.
இந்த எம்.பி.கே.கே விருதளிப்பு நிகழ்ச்சி மாநில அரசு சமூக சேவைக்கு வழங்கும் அங்கீகாரமாக திகழ்கிறது என ஸாக்கியுடின் வரவேற்புரையில் கூறினார்.
“அண்மையில் கோவிட்-19 தொற்றுநோய் எதிர்கொள்ளும் போராட்டத்தில் எம்.பி.கே.கே உறுப்பினர்களும் முன் வரிசை பணியாளர்கள் பட்டியலில் இடம்பெற்று பொது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினர் என்பது பாராட்டக்குறியது.
“மாநில அரசு எம்.பி.கே.கே உறுப்பினர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் ரிம300-ஐ ஊக்கத்தொகையாக வழங்கியது.
இந்நிகழ்ச்சியில் பத்து லஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் ஒங் ஆ தியோங்; சுங்கை பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் சியூ கிம்; வடகிழக்கு மாவட்டத் தலைவர் ரொஸ்லி ஹலிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் எங் சூன் சியாங் கூறுகையில், எம்.பி.கே.கே கம்போங் மெலாயு கழகத்தின் சாதனைகளும் முயற்சிகளும் வியப்படையும் வகையில் திகழ்கிறது, என்றார்.
“உதாரணத்திற்கு நீண்ட கால திட்டங்களில் ஒன்றான முத்தியாரா உணவு வங்கி திட்டத்தில் எம்.பி.கே.கே உறுப்பினர்கள் உள்ளூர் பொது மக்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்வர். மேலும், நீண்ட கால திட்டத்தில் பிரத்தியேக வகுப்பு மற்றும் மினி உடற்பயிற்சி மையம் அமைத்துள்ளனர்.
“எனது சட்டமன்ற தொகுதியில் இடம்பெறும் 7 எம்.பி.கே.கே கழகங்களில் கம்போங் மெலாயு கழகம் முன்னெடுத்து செல்கிறது,” என்றார்.