செபராங் ஜெயா – மத்திய செபராங் பிறை இந்திய காற்பந்து சங்கம் மற்றும் பினாங்கு இந்து இயக்கம், பினாங்கு தலைமை ஆசிரியர் மன்றம் ஒத்துழைப்புடன் ஆறாவது முறையாக வாசுதேவன் சுழற்கிண்ணம் மற்றும் பினாங்கு இந்து இயக்க சுழற்கிண்ண காற்பந்து போட்டி இனிதே நடைபெற்றது. பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற இப்போட்டி செபராங் ஜெயா சோனி விளையாட்டுத் திடலில் இடம்பெற்றது.
செபராங் பிறை வட்டாரத்தில் காற்பந்து விளையாட்டுத் துறைக்கு அதிகம் பங்களிப்பு வழங்கிய விளையாட்டு வீரர் வாசுதேவன் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் நோக்கத்தில் அவர் பெயரிலே தொடர்ந்து வாசுதேவன் சுழற்கிண்ண காற்பந்து போட்டி நடத்தப்படுகிறது. அதேவேளையில், பினாங்கில் பல்வேறு சமூக, சமய, விளையாட்டு நிகழ்ச்சிகளை வழிநடத்தி வரும் பினாங்கு இந்து இயக்கத்தின் ஏற்பாட்டில் பெண்களுக்கான சுழற்கிண்ணப் போட்டியும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த காற்பந்து சுழற்கிண்ணப் போட்டிகளை முறையே திரு. வாசுதேவன், இந்து இயக்க சார்பாக மோகன் முருகையா, பினாங்கு தலைமை ஆசிரியர் மன்ற தலைவர் மு.பாஸ்கரன் தொடக்கி வைத்தனர்.
கடந்த அக்டோபர் 12-ஆம் நாள் நடைபெற்ற இந்தப் போட்டியில் 21 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து ஆண்கள் பிரிவில் 21 குழுவினரும் பெண்களுக்கானப் பிரிவில் 16 குழுவும் பங்குக்கொண்டனர்.
இப்போட்டியை வழிநடத்துவதன் மூலம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் விளையாட்டுத் துறையில் குறிப்பாக காற்பந்தில் அதிக ஆர்வம் மற்றும் ஈடுபாடு கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர். இதன் மூலம் தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே விளையாட்டுத் துறையின் தரத்தை மேம்படுத்த துணைப்புரியும்.
வாசுதேவன் சுழற்கிண்ணத்தை மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியும், பெண்களுக்கான பினாங்கு இந்து இயக்க சுழற்கிண்ணத்தை புக்கிட் மெர்த்தாஜாம் தமிழ்ப்பள்ளியும் வாகை சூடி முறையே கோப்பை, பதக்கம், ரொக்கப் பணத்தைத் தட்டிச் சென்றனர். முதல் நிலை வெற்றியாளர்களுக்கு ரிம500, இரண்டாம் நிலைக்கு ரிம300, மூன்று மற்றும் நான்காம் வெற்றியாளர்களுக்கு ரிம100 வெள்ளி, கோப்பை மற்றும் பதக்கம் வழங்கப்பட்டன.