வால்டோர் தமிழ்ப்பள்ளிக்கு 2 ஏக்கர் நிலத்திற்கான நில உரிமம் வழங்கப்பட்டது.

Admin

வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1930ஆம் ஆண்டு நிறுவப்பட்டு வால்டோர் தோட்டப் பாட்டாளிகளின் பிள்ளைகள் கல்வி கற்பதற்குச் சிறந்த பாடசாலையாக விளங்கியது. 1963ஆம் ஆண்டு இப்பள்ளியின் நிர்வாகப் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதோடு தேசிய மாதிரி வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி எனும் பெயரும் சூட்டப்பட்டது. பின்னாளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அருகாமையில் இருந்த இளையோர் கட்டடம் பயன்படுத்தப்பட்டது. பிறகு,  1981ஆம் ஆண்டு இரண்டு கூடுதல் அறைகள் நிறுவப்பட்டது. மேலும், 2006ஆம் ஆண்டு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்     திரு தியாகராஜன் தலைமையில் 2 அறையைக் கொண்ட புதிய இணைப்புக் கட்டடம் நிறுவப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் மீண்டும் வகுப்பறை பற்றாக்குறைப் பிரச்சனைகள் எழுந்த வண்ணமாகவே இருந்தது.

ஆகவே, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு தியாகராஜன் மாநில அரசின் உதவியை நாடினார். கடந்த 2011 -ஆம் ஆண்டு பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசாங்கம் 2.18 ஏக்கர் நிலத்தைப் பள்ளியின் கட்டட நிர்மாணிப்பிற்காக வழங்கியது. அதில் 0.55 ஏக்கர் நிலம் அவ்விடத்தில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் ஆலயத்திற்கு வழங்கப்பட்டது. மாநில அரசு வழங்கிய 2 ஏக்கர் நிலத்திற்கான உரிமம் வழங்கும் நிகழ்ச்சி  கடந்த 17-3-2013 -ஆம் நாள் மகா மாரியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு அருகில் இருக்கும் 2.18 ஏக்கர் தனியார் நிலத்தை மாநில அரசு 20 லட்சம் செலவில் வாங்கித் தந்துள்ளது. மலேசிய வரலாற்றில் மாநில அரசாங்கம் தனியார் நிலத்தை வாங்கித் தமிழ்ப்பள்ளிக்கு வழங்கியிருப்பது இதுதான் முதன் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் அசாட், சுப்பிரமணிய பாரதி, பத்து காவான் ஆகிய தமிழ்ப்பள்ளிகளுக்குப் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசாங்கம் நிலம் வழங்கியுள்ளது என்பது சாலச் சிறந்ததாகும்.

பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புக் கண்காணிப்புக் குழுவின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமதி மங்களேஸ்வரி தயார் செய்த சட்டப்பூர்வ ஆவணத்தில் பள்ளியின் அரங்காவலர்கள் ஆறு பேர்களின் ஒப்புதல் கையொப்பமிடப்பட்டது. 0.58 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்நிலத்திற்கான ஆவணம் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலய நிர்வாகத்தினரிடம் வழங்கப்பட்டது. பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் பள்ளிக்கான நில உரிமத்தைப் பள்ளியின் மேலாளர் வாரியத்தின் தலைவரும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவருமான திரு தியாகராஜாவிடம் வழங்கினார்.

மாநிலத்தில் இருக்கின்ற அனைத்து தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் களையும் பொருட்டு மாநில அரசாங்கம்  என்றும்  துணைபுரியும்  என  இரண்டாம் துணை முதல்வர்  ப இராமசாமி அவர்கள் தம் சிறப்புரையில் கூறினார்.. இந்நிகழ்ச்சியில் புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர்  லாவ் சு கியோங், ஜாவி  சட்ட  மன்ற  உறுப்பினர்  டான்  பேங்  வாட்,  டத்தோ கா புலவேந்திரன், பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பு அதிகாரி டத்தோ டாக்டர் கே அன்பழகன், வால்டோர் தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரிய செயற்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், ஆலயத் தலைவர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 pic 1

மாண்புமிகு பினனங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் பள்ளிக்கான நில உரிமத்தை மாநில துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி முன்னிலையில் பள்ளியின் மேலாளர் வாரியத்தின் தலைவரும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவருமான  திரு தியாகராஜாவிடம் வழங்குகிறார். (நடுவில்)