பினாங்கு மாநில விளம்பர அனுமதி மற்றும் மேம்பாட்டாளர் உரிமம் (Advertising Permit and Developers Licence – APDL) பெறுவதற்கு விண்னப்பித்த 81 விண்ணப்பதாரர்கள் மற்றும் கூட்டரசு அரசிற்கு வழங்க வேண்டிய மொத்த மேம்பாட்டு மதிப்பீட்டு(Nilai Pembangunan Kasar) பற்றிய நிலையினைக் குறிப்பிடுமாறு புத்ராஜெயாவிடம் வலியுறுத்தப்பட்டது.
இந்த 81 மேம்பாட்டு விண்ணப்பங்களுக்கு விரைவாக ஒப்புதல் வழங்கினால் கூட்டரசு அரசிற்கு பல பில்லியன் ரிங்கிட் வருமானம் கிடைக்கப்பெறும் என எடுத்துரைத்தார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு.ஜெக்டிப் சிங் டியோ. ஏனெனில், ஒவ்வொரு மாநில அரசு மேம்பாட்டுத் திட்டத்திற்கும் கூட்டரசு அரசிடம் வரிச் செலுத்தப்படும் என்றார். இந்தச் செய்தியாளர் கூட்டத்தில் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், உள்ளூர் அரசு, போக்குவரத்து மேலாண்மை, வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ், லிம் ஹொக் செங் (பொதுப் பணி, போக்குவரத்து மற்றும் பயன்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர்) கலந்து கொண்டனர்.
கடந்த 26 ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்கள் அவையில் வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ஆகஸ்டு மாதம் 2014 முதல் பிப்ரவரி மாதம் 2015 வரை பினாங்கு மாநிலத்தில் பெறப்பட்ட 48 மேம்பாட்டு விண்ணப்பங்களில் 18 மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் 30 விண்ணப்பங்கள் இன்னும் செயல்முறை படுத்தவில்லை என்றும் மாநில முதல்வருக்கு வாய் மொழியாகக் குறிப்பிட்டுள்ளார்.
விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்க தாமதம் ஏற்படுவதற்கானக் காரணத்தைக் குறிப்பிடுமாறு வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் செயலாளருக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறினார் திரு ஜெக்டிப்.
கூட்டரசு அரசாங்கம் மாநில அரசின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்க தாமதிப்பதற்குக் காரணம் ஆராயப்படுவதோடு இப்பிரச்சனைக்குத் தீர்வுக்காணும் பொருட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார் திரு ஜெக்டிப்.}