விளையாட்டுத் துறையின் புதிய சகாப்தம்  மின்னியல் விளையாட்டு

Admin

பிறை – பினாங்கு இந்தியர் காற்பந்து சங்கம் முதல் முறையாக மின்னியல் காற்பந்து விளையாட்டுப் போட்டியை பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். 

“விளையாட்டுத் துறையின் புதிய மைல்கல்லாக மின்னியல் விளையாட்டு உருவெடுத்துள்ளது. எனவே, இளைஞர்கள் விளையாட்டுத் துறையின் மீது கொண்ட ஆர்வம், ஈடுபாடு  அனைத்தும்   மின்னியல் விளையாட்டில் ஈர்த்துள்ளது. 


“ஏனெனில், தற்கால இளைஞர்கள் தொலைபேசி போன்ற தொழில்நுட்ப சாதனங்கள் பயன்பாட்டில் அதிக நாட்டம் கொள்கின்றனர்.  இதனால் மின்னியல் விளையாட்டு, விளையாட்டுத் துறையின் எதிர்காலமாக திகழும்,” என முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பினாங்கு காற்பந்து சங்க தலைவர் ஸ்ரீ சங்கர் இவ்வாறு கூறினார்.

“அன்றைய காலம் போல் இல்லாமல் தற்போது கோவிட்-19 தொற்று தாக்கத்தால் அதிகமான இளைஞர்கள் வெளியே சென்று விளையாட முடியாத சூழல் நிலவுகிறது. அதுமட்டுமின்றி, இளைஞர்கள் காற்பந்து விளையாட்டை காட்டிலும் புட்சால் விளையாட்டில் அதிகம் நாட்டம் கொள்கின்றனர். 

“இளைஞர்கள் வெளியில் சென்று தீயச் செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்கு மின்னியல் விளையாட்டு சிறந்த தேர்வாக அமையும். 

“மின்னியல் விளையாட்டு பொழுது போக்காக மட்டும் இல்லாமல் அதில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள்  சுக்மா விளையாட்டுப் போட்டி, சீ விளையாட்டுப் போட்டி மற்றும் அனைத்துலக ரீதியில் நடத்தப்படும்  மின்னியல் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும், என்றார்.

இந்த மின்னியல் விளையாட்டுப் போட்டி சிவம் கேட்டரிங், மலேசிய தமிழர் குரல் இயக்கம் மற்றும்
மின்னியல் விளையாட்டு சங்க இணை ஆதரவுடன்  சிறப்பாக நடைபெற்றது. 

தாமான் இண்டிராவாசே, மலேசிய தமிழர் குரல் இயக்க தலைமையகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 16 முதல் 35 வயது வரம்பில் ஏறக்குறைய 32 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். 

இப்போட்டியில் தி.ஈஸ்வீரம் முதல் நிலை வெற்றியாளராகவும், கல்விண்டர் சிங் (இரண்டாம் நிலை) மற்றும் மூன்றாம் நிலையில் தி.சஞ்சிவரம் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றனர். 

இப்போட்டியின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட தமிழர் குரல் இயக்கத் தலைவர் டேவிட் மார்ஷல் வெற்றியாளர்களுக்கு வெற்றி கோப்பை எடுத்து வழங்கினார்.