2017-ஆம் ஆண்டு பினாங்கு மாநில தைப்பூசக் கொண்டாட்டம் தங்க இரத ஊர்வலத்துடன் தொடக்க விழாக் காணும் என அறிவித்தார் மாநில இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி. கடந்த காலங்களில் இந்த “வேல் ஊர்வலம் ” சகடை எனும் சிறிய தேரில் மாரியம்மன் ஆலயத்திலிருந்து ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்திற்குக் கொண்டுச் செல்லப்படும். அடுத்த ஆண்டு தொடங்கி தைப்பூச விழாவின் சின்னமாகத் திகழும் “வேல்” தங்க இரதத்தில் பிரமாண்டமாக குவின் ஸ்ரிட் மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு தண்ணீர்மலை ஶ்ரீ பால தண்டாயுதபாணி சன்னதியை வந்தடையும் என “வேல் இரதம்” குறித்த சந்திப்புக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
“வேல் இரதம்” ஊர்வலம் குறித்த சந்துப்புக் கூட்டம் கடந்த 26/3/2016-ஆம் நாள் இந்து அறப்பணி வாரிய அரங்கில் 100-க்கும் மேற்பட்ட அரசு சாரா இயக்கங்களும் தீவுப்பகுதியில் அமைந்திருக்கும் ஆலயத் தலைவர்களும் இனிதே கலந்து கொண்டனர். இந்த சந்திப்புக் கூட்டத்தில் தங்க இரத ஊர்வலம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதோடு இயக்கம் மற்றும் ஆலய பொறுப்பாளர்களும் தங்களின் கருத்துகள் முன் வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டன.
2/4/2016-ஆம் நாள் பெருநிலப்பகுதியில் அமைந்திருக்கும் ஶ்ரீ மாரியம்மன் மண்டபத்தில் “வேல் இரதம் ” குறித்த சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது எனவும் அரசு சாரா இயக்கப் பொறுப்பாளர்கள் மற்றும் ஆலயத் தலைவர்கள் கலந்து கொண்டனர் என வாரியத் தலைமை நிர்வாக அதிகாரி திரு இராமசந்திரன் தெரிவித்தார்.
“வேல் இரதம்” ஊர்வலம் குறித்த தீர்மான முடிவு கூடிய விரைவில் பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் என எடுத்துரைத்தார். .}