ஶ்ரீ டெலிமா தொகுதி துரித வளர்ச்சி கண்டது

புதுப் பொழிவுக் கண்ட தாமான் துன் சர்டோன் சந்தை (அருகில் சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் , ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ்)

பொதுமக்களின் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்கும் ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் இந்தியர்கள் மட்டுமின்றி பல்லின மக்களின் மனதில் பதிந்துள்ளார். 2008-ஆம் ஆண்டு முதல் ஶ்ரீ டெலிமா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் திகழும் இராயர் புகழ்ப்பெற்ற வழக்கறிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது தொகுதியில் வாழும் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் பிரச்சனைகள் கேட்பதற்கு அண்மையில் உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் உடன் நேதாஜி இராயரும் ஶ்ரீ டெலிமா தொகுதிக்குச் சுற்றுலா மேற்கொண்டனர்.
இந்த பயணத்தில் பினாங்கு மாநகர் கழகத்தின் உறுப்பினர்களான திருமதி கலா, சேர்லினா மற்றும் புக்கிட் குளுகோர் கிராமத் தலைவர் நஸ்ரிசால் நாசிப் கலந்து கொண்டனர்.
தாமான் துன் சர்டோன் சந்தை
பினாங்கு மாநகர் கழகம் (எம்பிபிபி) ரிம1.2 லட்சம் செலவில் தாமான் துன் சர்டோன் சந்தையில் பொது வசதிகளுடன் மறுசீரமைப்புச் செய்யப்பட்டது. 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மறுசீரமைப்புப் பணி கடந்த ஏப்ரல் மாதம் நிறைவுப்பெற்றது. தற்போது இந்த சந்தையில் மறுசீரமைப்புக் காணப்பட்ட கழிவறை 5 நட்சத்திர தங்கும்விடுதியைப் போல புதுப்பொழிவுடன் காண்கிறது என செய்தியாளர்களிடம் அகம் மகிழ தெரிவித்தார் இராயர். இச்சந்தை வாடிக்கையாளர்கள் கடந்த 2008-ஆம் ஆண்டுக்குப் பின் இச்சந்தை கழிவறை, மின்தூக்கி, மற்றும் சாயம் பூசுதல் என பல பொது வசதிகளுடன் மேம்பாடு கண்டுள்ளது எனக் கூறினர்.
கார் நிறுத்துமிடம் பற்றாக்குறை
அய்லன் கிலாட்ஸ் குடியிருப்புப் பகுதியில் வாழும் பொதுமக்கள் வாகனம் நிறுத்த இட பற்றாக்குறை பிரச்சனையை எதிர்நோக்குகின்றனர். எனவே, கிரிஸ்தல் அய்ட்ஸ் குடியிருப்புப் பகுதி முன்பிறம் இருக்கும் 25,000 சதுர அடி நிலப்பரப்பில் புதிய கார் நிறுத்தும் இடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. “இதற்கு முன்னதாக எம்பிபிபி-க்கு இந்நிலத்தில் கார் நிருத்துமிடம் அமைக்க கடிதம் எழுதியதாகவும், இந்நிலம் பொழுதுபோக்கு நிலம் என்பதால் அதன் பயன்பாடு குறித்து மாற்றம் செய்வதில் சில சிக்கல் இருப்பதையும் சுட்டிக்காட்டினார் இராயர். எனினும், இந்தப் பிரச்சனைக் களைய தொடர்ந்து முயற்சி எடுப்பேன் என உறுதியளித்தார்.

தாமான் துன் சர்டோர் காற்பந்து அரங்கத்தில் நிழவும் நீர் கசிவு ஆராயப்படுகிறது

விளையாட்டு மைதானம் மறுசீரமைப்பு
லோராங் டெலிமா 9-ல் அமைந்துள்ள விளையாட்டு மைதான நடைப்பாதை சமமாக இல்லை அதோடு உடைப்பட்டும் காணப்பட்டது. இதனால் உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் மக்கள் கால் தவறி கீழே விழும் அவலநிலை ஏற்படுகிறது. சமூக சேவை துறை இயக்குநர் (எம்பிபிபி), ராஷிடா ஜாலாலுடின் இந்த விளையாட்டு மைய நடைப்பாதை மேம்பாட்டு திட்ட செலவினங்கள் கணக்கிடப்பட்டு இந்த வருடம் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மேம்பாட்டுப் பணி தொடங்கப்படும் என பொதுமக்கள் முன்னிலையில் அறிவித்தார்.
காற்பந்து அரங்கம்
தாமான் துன் சர்டோன் மற்றும் சுங்கை குளுகோர் பகுதியில் அமைந்துள்ள காற்பந்து அரங்கம் (புட்சல்) மேம்பாடு காண வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். பொதுவாகவே, இவ்விரு அரங்கமும் இரவில் பயன்படுத்தப்படுவதாலும் எதிர்பாராத வானிலை மாற்றம் ஏற்படுவதாலும் மேற்பகுதியில் கூரை பொருத்துமாறு ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ்விடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும், மாநில அரசாங்கத்தின் உதவியால் சமூக முன்னேற்ற மற்றும் பாதுகாப்பு (ஜேகேகேகே) மண்டபம் மற்றும் காற்பந்து அரங்கம் அமைக்கப்பட்டது என ஜேகேகேகே தலைவர் மேராசிக் ஜாப்பார் தெரிவித்தார். மேலும் தாமான் துன் சர்டோனில் அமைந்துள்ள அரங்கத்தில் நீர் கசிவு ஏற்படுகிறது. எனவே, இந்நீர் கசிவு குழாய் நீர் உடைப்பால் ஏற்பட்டதா அல்லது ஊற்று நீர் கசிவா என கண்டறிய பினாங்கு நீர் வாரியத்துடன் கிராமத் தலைவர் நஸ்ரிசால் சந்திப்பு நடத்த எண்னம் கொண்டுள்ளதாகக் கூறினார். சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் முழு ஒத்துழைப்பும் வழங்குவேன் என்றார் இராயர்.
நம்பிக்கை
மாநில நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் மேம்படுத்திய பொது வசதிகள் அனைத்தும் ஶ்ரீ டெலிமா மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் என்றார். இத்தொகுதியில் வாழும் ஏறக்குறைய 7,000 வாக்காளர்கள் மாநில அரசின் சமூகநல பங்களிப்பில் நன்மை பெறுகின்றனர். இத்தொகுதியில் வெள்ளப் பேரிடர், நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் இல்லாமல் மக்கள் சொகுசாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றனர் என்றார்.